பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல் நினோ நிகழ்வு தொடர்ந்து வலுவடைந்து வருவதால், வரும் டிசம்பர் மாதத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டக்கூடும் என்று உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது.இதன் தாக்கம் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பருவகாலக் கணிப்பின்படி, பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல் நினோவின் தீவிரத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் ‘நினோ 3.4’ பகுதியில், கடல் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாடு ஜூன் மாதத்தில் வழக்கத்தைவிட 1.6 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் இது 2.5 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது.
தற்போதைய கணிப்புகளின்படி, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்த வெப்பநிலை மாறுபாடு சுமார் 3.7 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும். இது 2015-16 காலகட்டத்தில் பதிவான 2.6 டிகிரி செல்சியஸ் என்ற முந்தைய உச்சத்தைவிட அதிகமாகும் என உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
எல் நினோ நிகழ்வு டிசம்பர் மாதத்தில் உச்சத்தை எட்டும் என்றும், 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிப்பதற்கு கிட்டத்தட்ட 100 சதவீத வாய்ப்பு இருப்பதாகவும் உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது.
1950-ஆம் ஆண்டு முதல் பதிவான எல் நினோ நிகழ்வுகளில், தற்போதைய நிகழ்வு மிகவும் வலுவானவற்றில் ஒன்றாக அமையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது ஒரு பருவகால முன்னறிவிப்பு என்பதால், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கண்காணிப்பின் அடிப்படையில் மதிப்பீடுகள் மாறக்கூடும்.
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை மாற்றங்களுடன் தொடர்புடைய இயற்கையான காலநிலை நிகழ்வாகும். இது உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு முறைகளைப் பாதிக்கக்கூடும்.
இதன் தாக்கத்தால் சில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை நிலவலாம். சில இடங்களில் மழைப்பொழிவு குறைந்து வறட்சி ஏற்படக்கூடும்; மற்ற பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரிக்கலாம். இதனால் விவசாயம், குடிநீர் விநியோகம் மற்றும் உணவு உற்பத்தி உள்ளிட்ட துறைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எல் நினோ இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் மழைப்பொழிவு முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் சில பகுதிகளில் வழக்கத்தைவிடக் குறைவான மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வானிலை பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. உள்ளூர் வானிலை நிலவரங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனை நிகழ்வு (IOD) உள்ளிட்ட பிற காலநிலைக் காரணிகளும் மழைப்பொழிவைத் தீர்மானிக்கும்.
எல் நினோவால் ஏற்படக்கூடிய வெப்ப அலைகள், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள வானிலை முன்னறிவிப்புகளைக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை உலக வானிலை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
உலகளாவிய வெப்பநிலை ஏற்கெனவே அதிகரித்து வரும் நிலையில், வலுவடையும் எல் நினோ நிகழ்வு கூடுதல் காலநிலைச் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அரசுகளும் பொதுமக்களும் வானிலை எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.







