குஜராத் முதல்வராக இருந்து பிரதமராக பதவியில் நீடிக்கும் பிரதமர் மோடி அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில், 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றி சாதிப்போம் என உறுதி அளித்துள்ளார். குஜராத் முதல்வராக பிரதமர் மோடி கடந்த 2001 அக்டோபர் 7ம் தேதி பதவியேற்றார். அதிலிருந்து தொடர்ந்து 4 முறை குஜராத் முதல்வராகவும் (12.5 ஆண்டுகள்), 2014ல் இருந்து 3 முறை தொடர்ந்து பிரதமராகவும் (12.5 ஆண்டுகள்) பதவி வகித்து வருகிறார். இதன் மூலம், அரசு தலைமைப் பொறுப்பில் பிரதமர் மோடி நேற்றுடன் தனது 25 ஆண்டு காலத்தை நிறைவு செய்தார்.
இதையொட்டி, டெல்லியில் நடந்த வளர்ந்த இந்தியாவுக்கான உறுதிமொழி கூட்டத்தில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: நமது நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், வாக்கு வங்கி அரசியலின் அடிப்படையில் சமூகம் பிளவுபட்டிருப்பதுதான். ஒரு விவசாயியின் வயலில் தண்ணீர் இல்லாதபோது, அந்த பிரச்சனை குறிப்பிட்ட சாதியை மட்டும் பாதிக்கிறதா? மின்சாரம் இல்லாதபோது, குறிப்பிட்ட சமூகத்தின் மீது மட்டும் இருள் சூழ்கிறதா? இல்லை. பிரச்னை அனைவருக்கும் பொதுவானது என்றால், அதற்கான தீர்வும் அனைவருக்கும் உரியதாகவே இருக்க வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாம் 40 கோடிக்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்தோம்.
இன்று 140 கோடிக்கும் அதிகமானோர் இருக்கிறோம். 140 கோடி மக்களும் இணைந்து 2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம். நிச்சயமாக அதைச் செய்வோம். நாம் அதை சாதிப்போம். ஒரு காலத்தில் கற்பனை செய்ய முடியாததாகத் தோன்றியவை இன்று சாத்தியமாகியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டு வர முடியும் என்று யார் நினைத்திருப்பார்கள்? ஆனால் இந்தியா அதை சாத்தியமாக்கியது. அதனால்தான் 140 கோடி இந்தியர்களின் வலிமையையும் ஆற்றலையும் நான் நம்புகிறேன். 25 ஆண்டுகால அனுபவத்திற்குப் பிறகு, இந்தியாவின் மாற்றத்தை நாம் நம் கண்முன்னே காண்கிறோம் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
தொலைநோக்குப் பார்வையுடனான கொள்கைகள் மற்றும் இடைவிடாத கடின உழைப்பின் மூலம் இந்த இலக்குகள் அடையப்படும். இந்தியா சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால் நம்மிடம் 140 கோடி தீர்வுகளும் உள்ளன. குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்றபோது, இத்தகைய மைல்கல்லை எட்டுவேன் என ஒருபோதும் நினைக்கவில்லை. என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் இந்திய மக்களுக்கு தலைவணங்குகிறேன். என்னைப் பொறுத்தவரை மக்களே கடவுள். கடினமாக உழைக்கும் பாஜ தொண்டர்களே எனது பலம். பாஜ மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்தவர்களுக்கும் ஜனநாயகத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடிக்கு ஜப்பான், பூடான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜப்பான் பிரதமர் சனாயே டகாயிச்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ”பல ஆண்டுகளாக இந்திய மக்களின் மற்றும் நாட்டின் வளர்ச்சியை நனவாக்க பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார். இந்தியாவின் வளர்ச்சியை விரைவுபடுத்தியதோடு, சர்வதேச அரங்கிலும் இந்தியாவின் கண்ணியத்தை புதிய உயரங்களுக்கு அவர் கொண்டு சென்றுள்ளார். இந்த சாதனைக்காக சக அரசியல்வாதியாக எனது மரியாதையை தெரிவிக்கிறேன்” என கூறி உள்ளார். பெல்ஜியம், நேபாளம், நைஜீரியா, போட்ஸ்வானா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால பொது வாழ்வு பயணத்தை பாஜ மூத்த தலைவர்கள் பலரும் பாராட்டினர். பாஜவின் எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து பல வீடியோக்கள் வெளியிடப்பட்டன. மேலும், அதன் பாராட்டு பதிவில், ”எண்ணற்ற சவால்களுக்கு மத்தியிலும், பிரதமர் மோடியின் வாழ்க்கைப்பயணம் அவரது அசைக்க முடியாத மன உறுதிக்கான சான்றாக திகழ்கிறது. எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் அவர் தனது பணிகள், தற்சார்பு இந்தியா எனும் தொலைநோக்குப் பார்வை மற்றும் நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றின் மூலமே பதிலளித்துள்ளார். இது ஒருபோதும் பணியாத, நிற்காத மற்றும் என்றும் ஓயாத உறுதியான தலைமையின் காவியம் அவர்” என கூறி உள்ளது.
பிரதமர் மோடி நேற்று காலை டெல்லி சரோஜினி நகரில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அவர் தனது எக்ஸ் பதிவில், ”விநாயகர் கோயிலில் பூஜையும் வழிபாடும் செய்தேன். தடைகளை நீக்கும் விநாயகப் பெருமான் அருளால் நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆசிபெறவும், நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறவும் பிரார்த்தனை செய்தேன்” என கூறி உள்ளார்.







