இன்றைய ‘ஜென் ஜி’ இளைஞர்கள் என்றாலே இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகளில்தான் அதிக நேரத்தைச் செலவிடுவார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இந்திய இளைஞர்களின் அசல் விருப்பம் குறித்து கூகுள் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை இந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள 18 முதல் 24 வயதுடைய இளைஞர்களுக்கு, ஒரு வருடத்திற்கு ஒரே ஒரு வீடியோ செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிலை வந்தால், அவர்களின் முதல் தேர்வாக யூடியூப் மட்டுமே இருக்கும் என்று ‘திங்க் வித் கூகுள்’ அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இன்ஸ்டாகிராம் அல்லது ஸ்னாப்சாட்டை விட யூடியூப்பையே அவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள்.
யூடியூப்பில் குறுகிய கால வீடியோக்கள் (Shorts) மட்டுமன்றி, விரிவான வீடியோக்கள், பாட்காஸ்ட்கள், லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் கல்வி சார்ந்த விஷயங்கள் என அனைத்துமே ஒரே இடத்தில் கிடைப்பதே இதன் முக்கியக் காரணமாகும். பொழுதுபோக்குடன் சேர்த்து, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் இது அவர்களுக்குப் பெருமளவில் உதவுகிறது.
இந்த ஆய்வில் பங்கேற்ற 76% இந்திய இளைஞர்கள், யூடியூப்பில் செலவிடும் நேரம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், 93% பேர் யூடியூப் கிரியேட்டர்கள் வழங்கும் தகவல்கள் மற்ற சமூக வலைதளங்களை விட மிகவும் நம்பகமானவையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்திய ஜென் ஜி இளைஞர்களுக்கு யூடியூப் என்பது வெறும் வீடியோ பார்க்கும் இடம் மட்டுமல்லாமல், தகவல் அறிந்துகொள்ளவும், ஷாப்பிங் வழிகாட்டல்களைப் பெறவும் மற்றும் தங்களுக்குப் பிடித்தமான விஷயங்களை விரிவாகக் கற்றுக்கொள்ளவும் பயன்படும் மிக முக்கிய தளமாக உருவெடுத்துள்ளது.







