ஆய்வகத்திலிருந்து லீக் ஆன ஆபத்தான வைரஸ் – இளம் விஞ்ஞானி உயிரிழப்பு

ரஷ்யாவில் ஆய்வகம் ஒன்றில் ஆபத்தான வைரஸை கையாளும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் வைரஸ் லீக் ஆனதில் இளம் விஞ்ஞானி ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

இதனால் அந்த பகுதி முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வைரஸால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று கேள்விகள் எழுந்திருக்கும் நிலையில்.. இந்திய மருத்துவ சங்கம் இது குறித்து விளக்கமளித்திருக்கிறது.

ரஷ்யாவின் சைபீரியாவில் இர்குட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள ஆன்டி-பிளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்கு பணியாற்றி வந்த தர்யா ஷிபிலோவா என்ற 28 வயது பெண், ஆபத்தான கிருமி மாதிரிகளை சேகரிக்கும்போது எதிர்பாராதவிதமாக கிருமிகள் இருந்த ஒரு சோதனை குழாயை உடைத்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பரவிய தொற்றால்.. அவருக்கு தீவிர நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அக்.1ம் தேதி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்ய அரசு அதிகாரிகள் மற்றும் சுகாார அமைப்பான ரோஸ்போட்ரெப்நாட்சர் விளக்கமளித்தது. அதாவது இந்த வைரஸ் அதீத ஆபத்தான தொற்று என்று கூறியிருக்கிறது.

வைரஸ் பரவி ஒருவர் உயிரிழந்ததையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள், அலுவலக ஊழியர்கள் என 197க்கும் மேற்பட்டோரை மருத்துவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தினர். அவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் நல்வாய்ப்பாக எல்லோருக்கும் நெகட்டிவ் என்றே ரிசல்ட் வந்திருக்கிறது. இருப்பினும் இந்த பகுதி முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

பொதுவாக வைரஸ் என்றாலே அது காற்றில் பரவும் என்பதால், இது பக்கத்து நாடுகளுக்கோ, இந்தியாவுக்கோ பரவும் அபாயம் இருப்பதாக பலரும் அச்சம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இது குறித்து இந்திய மருத்துவ சங்கம் விளக்கமளித்திருக்கிறது.

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய ஆராய்ச்சி பிரிவின் துணைத் தலைவரான டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் இது குறித்து கூறியதாவது, “ஆய்வகத்திலிருந்து பரவியது நியூமோனிக் பிளேக் நோய்த்தொற்று என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. ஒருவர் உடலில் இந்த தொற்று ஏற்பட்டால்.. அதன் அறிகுறிகள் மிக மிக வேகமாக உடலை தாக்கும். கிருமி உடலுக்குள் சென்ற சில மணி நேரங்களிலேயே நோயாளி கடுமையான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவார். அவரால் எழுந்து கூட நடக்க முடியாது. இப்படி இருக்கும் நபர் எப்படி விமானம் பிடித்து வெளிநாட்டுக்கு போக முடியும்? அப்படி போனால்தானே நோய்த்தொற்று பரவும்?

எனவே இந்த தொற்று இந்தியாவுக்கு பரவும் என்பது கொஞ்சம் கூட சாத்தியமே இல்லை. தொற்று பாதித்த நபர் உடல் நல பாதிப்புகளுடன் பயணித்தாலும் கூட.. விமான நிலைய சோதனைகளில் அவர் மிக எளிதாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார். இது நுரையிரலை கடுமையாக தாக்கும். மட்டுமல்லாது, இருமும் போதும், தும்பும்போதும் இது மற்றவர்களுக்கு வேகமாக பரவும். இருந்தாலும் நாடு தாண்டி பரவாது. ஆனாலும் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிர்களை பறித்தது. இதன் தாக்கம் இன்னமும் முழுமையாக மறையவில்லை. இப்படி இருக்கையில் புதிய வைரஸ் தொற்று பரவுவதாக தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.