கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடன் கிராமிற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஆண்டில் நகைக் கடனுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 12-ல் இருந்து 13 சதவீதமாக உயர்த்தப்பட்டு தங்கத்தின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் அல்லது கிராமுக்கு அதிகபட்சமாக 7 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடன் தொகை கிராமுக்கு 10 ஆயிரம் வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என மாற்றியமைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கிய நகை கடன்களில் வட்டி வேறுபாடு நிலவிய நிலையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம், கூட்டுறவு சங்க கிளைகளில் வழங்கப்படும் நகைக் கடன் வட்டியை விடக் 1 புள்ளி 25 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உயர்த்தப்பட்ட கடன் அளவு, புதிதாக வழங்கப்படும் நகைக் கடன்களுக்கும் மற்றும் ஏற்கனவே பெறப்பட்டு தற்பொழுது புதுப்பிக்கப்படும் நகைக் கடன்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






