குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம் பெறுவது எப்படி?

அரசு மற்றும் அரசு உதவி பெரும் உதவி பெறும் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ என்ற பெயரில் தலா ஒரு கிராமில் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை நேற்று முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று மதியம் 12:30 மணியளவில் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து இத்திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான கடந்த ஜூன் 22ஆம் தேதி அரசு மருத்துவமனை மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்திட்டம் பயன்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் ஆண்டுக்கு 4.2 லட்சம் முதல் 4.4 லட்சம் குழந்தைகள் இதனால் பயன்பெறு வார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் 22 காரட் (916 தரத்திலானது) தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. அந்த மோதிரத்தில் தமிழ்நாடு அரசின் சின்னம், பி.ஐ.எஸ். ஹால்மார்க் முத்திரை மற்றும் தனிப்பட்ட வரிசை எண் ஆகியவை இருக்கும். இது, ‘டேம்பர்ப்ரூப்’ பேக்கிங்கில் பாதுகாப்பாக வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை எப்படி பெற வேண்டும் என்பதை பார்க்கலாம். தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் பயன்பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அதன்படி, குழந்தையின் தாய், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது தற்காலிகமாக வந்து தமிழ்நாட்டில் வசிப்பவர்கள், இந்த திட்டத்தின் பயனை பெறமுடியாது. அரசு மருத்துவமனை, அரசு சுகாதார மையம், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு தாலுகா மருத்துவமனை, அரசு மாவட்ட மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் ஒன்றில் பிறந்திருக்க வேண்டும்.தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் மோதிரம் வழங்கப்படாது. தாய் அமைப்பில் பதிவு செய்து அதற்காக அடையாள எண்ணை பெற்றிருக்க வேண்டும். ஒரு தாய்க்கு எத்தனை குழந்தைகள் பிறந்தாலும், இந்த திட்டத்தில் பயனடைய முடியும். இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் இரண்டு மோதிரங்கள் வழங்கப்படும். மோதிரம் பெற விரும்பும் தாய், தனது முகவரி ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, தமிழக அரசு வழங்கிய ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தாயின் ஆதார் அட்டை, தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை, அஞ்சல் துறை முகவரி சான்று, இருப்பிட சான்றிதழ் அல்லது பிறப்பிட சான்றிதழ் ஆகியவற்றுடன் தாய் திட்டத்தின் பதிவுச்சான்று, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் அல்லது அரசு மருத்துவமனை பிரசவ பதிவு சான்று ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்படி, குழந்தை பெற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் நிலையில், ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு மோதிரம் வழங்கப்படும். மோதிரம் பெறுவதற்காக ஆன்லைனில் தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை; அரசு மருத்துவமனையில் பிரசவம் நடக்கும் நிலையில், தானாகவே தகுதிகளை சரி பார்த்து டிஸ்சார்ஜ் ஆகும்போது மோதிரம் வழங்கி விடுவார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கர்ப்பம் தரித்த 3 மாதத்திற்குள், அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தில் பெயர் பதிவு செய்து அடையாள எண்ணை கண்டிப்பாக பெற வேண்டும் என்பதுதான். மாநிலம் முழுவதும் உள்ள 107 சுகாதார மையங்களில் மோதிரம் வழங்கப்படுகிறது. அருகிலுள்ள மையத்தை அணுகி ஆவணங்களுடன் செல்ல வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் இம்மாதம் (செப்டம்பர்) 27-ந்தேதி (அதாவது நேற்று முன்தினம்) வரை பிறந்த குழந்தைகள் அங்கு சென்று ஆவணங்களை காட்டி மோதிரத்தை பெறலாம். திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட 28-ந்தேதி (நேற்று) முதல் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கேயே டிஸ்சார்ஜ் ஆகும்போது மோதிரத்தை வாங்கிக்கொள்ளலாம்.