தாராபுரம், மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்.2, 3ல் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்.
செப்.27, 28ல் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2 தொகுதிகளிலும் திமுக, தவெக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. இதனால் இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளர்களின் பிரசாரம் அனல் பறந்து வருகிறது.
ஒவ்வொரு கட்சி பிரமுகர்களும் மதுராந்தகத்தில் முகாமிட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் இருவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் மதுராந்தகத்தில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் நிர்வாகிகள் கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. தாராரபுரத்தில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் முத்துசாமி, சாமிநாதான், செந்தில்பாலாஜி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 2ம் தேதி தாராபுரத்தில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அவர், தாராபுரம் தேர்தல் அலுவலகத்தில் இருந்து பொள்ளாச்சி சாலை, பூக்கடை சந்திப்பு வழியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். பின்னர், மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து சிறப்புரையாற்றுகிறார். வரும் 27ம் தேதி எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் 4 இடங்களில் பொதுமக்களை சந்தித்து வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். 28ம் தேதி கனிமொழி எம்.பி தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
மதுராந்தகம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 3ம் தேதி பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளார். அன்றைய தினம் அங்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து பேசுகிறார். முன்னதாக திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வரும் 29ம் தேதி பிரசாரம் செய்கிறார். எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் அங்கு நடந்த இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.
அவரும் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்கான சுற்றுப்பயணமும் தயாராகி வருகிறது. இதே போல முன்னாள் அமைச்சர்கள் தொகுதிகளை முற்றுகையிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் பிரசாரத்திற்கு வர உள்ளார். தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் பிரசாரம் களத்தில் குதித்த உள்ளதால் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.









