டாஸ்மாக்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிப்பது, சில்லரை தட்டுப்பாடு, ரொக்கப் பணத்தை கையாள்வது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் அடுத்தடுத்து புதிய நடைமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இனி ரூ.500 வரை மட்டுமே ரொக்கமாகவும், அதற்கு மேல் டிஜிட்டல் முறையிலும் பணம் பெற டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் மதுபான ஆலை முதல் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்வது வரை கணினிமயமாக்கும் திட்டம் கடந்த 2024-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மதுபான பாட்டிலும் கையடக்க கருவி மூலம் பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கடைகளில் கியூ.ஆர். குறியீடு மூலம் டிஜிட்டல் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால், தமிழகத்தில் தினமும் சராசரியாக சுமார் ரூ.150 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகும் நிலையில், 80 சதவீதத்துக்கும் அதிகமான தொகை ரொக்கமாகவே வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணம் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு மறுநாள் வங்கிகளில் செலுத்தப்படுகிறது. இதனால் பணத்தை எடுத்துச் செல்லும்போது பாதுகாப்பு பிரச்னைகளும் ஏற்படுகின்றன. மேலும், டாஸ்மாக் இணையதளம் மூலம் மதுபானங்களை தேர்வு செய்து முன்கூட்டியே பணம் செலுத்தி வாங்கும் வசதியும் உள்ளது. ஆனால், இந்த முறையில் பணம் செலுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

ரொக்கப் பணம் பெறுவதில் ஊழியர்கள் அதிக ஆர்வம் காட்டுவதே இதற்கு காரணம் என டாஸ்மாக் நிர்வாகம் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரொக்கப் பணப்புழக்கத்தை குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் தொகை வசூலிப்பதையும், சில்லரை தட்டுப்பாட்டையும் கட்டுப்படுத்த முடியும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் தொகை வசூலிப்பது தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. கடந்த செப்டம்பர் மாதத்திலும் மதுபான பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்ததாகக் கூறி 150க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூலித்தால் பொதுமக்கள் காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றும், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

இதனால், கணினிமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைமுறைகள் இருந்தும் கூடுதல் விலை வசூலிப்பை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை தொடர்வதாக பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தில் கணினிமயமாக்கல், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, தானியங்கி சரக்கு விநியோகம், புதிய மதுபான வகைகள் என அடுத்தடுத்து பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது, பில் வழங்காதது, விரும்பிய மதுபான வகைகள் கிடைக்காதது போன்ற புகார்கள் தொடர்ந்து எழும் நிலையில், புதிய தொழில்நுட்ப நடைமுறைகள் மட்டும் இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயில் கவனம் செலுத்துவதுடன், கடைகளில் நடைபெறும் விற்பனை முறைகேடுகளை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கும், பொதுமக்களிடம் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்வதற்கும் தமிழக அரசு கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.