நாட்டின் முன்னணி ஆன்மீக சுற்றுலாத் தளமான திருமலை திருப்பதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இங்கு முக்கிய விழா நாள்களில் வழக்கத்தை விட அதிக பக்தர்களின் எண்ணிக்கை ஏழுமலையானை தரிசிக்க வருவார்கள் என்பதால், போக்குவரத்து, எந்த வகையான தரிசன சேவைகள் உள்ளன என்பது குறித்த விதிகள் மாறுபடுவது வழக்கம்.
இது தொடர்பாக முன்னறிவிப்புகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக வழங்கும். இந்த நிலையில் திருமலை மலைப்பாதையில் செல்லும் தனியார் வாகனங்களுக்கான அனுமதி குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளை மறுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) மற்றும் திருப்பதி மாவட்டக் காவல் துறை ஆகியவை ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு கூட்டு விளக்கத்தை வெளியிட்டன. இதில், திருமலை மலைப்பாதையில் செல்லும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையில் எந்தக் கட்டுப்பாடோ அல்லது தினசரி உச்சவரம்போ விதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 15,000 ஆக TTD கட்டுப்படுத்தியுள்ளதாகவும், அதற்கு மேற்பட்ட வாகனங்கள் மலை அடிவாரச் சோதனைச் சாவடிகளில் தடுத்து நிறுத்தப்படும் என்றும் இணையத்தில் பரவிய தகவல்களைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் முற்றிலும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று குறிப்பிட்ட TTD மற்றும் காவல் துறையினர், சரிபார்க்கப்படாத சமூக ஊடகச் செய்திகளை நம்பவோ அல்லது மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் என்று பக்தர்களைக் கேட்டுக்கொண்டனர்.
வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கு முன்னதாக பக்தர்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் திட்டமிட்டுத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் திருப்பதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எல். சுப்பராயுடு தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, போலியான தகவல்களை உருவாக்கிப் பரப்பியவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, திருமலை இரண்டாம் நகரக் காவல் நிலையத்தில் ஒரு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. வாகனங்களின் எண்ணிக்கையில் தன்னிச்சையான கட்டுப்பாடுகள் எதையும் விதிக்காமலேயே, திருவிழாக் காலக் கூட்டத்தைக் கையாள்வதற்கான போக்குவரத்து மேலாண்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை TTD-யுடன் (திருமலை திருப்பதி தேவஸ்தானம்) இணைந்து சுமூகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) வலியுறுத்தினார்.
பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்கள் அல்லது குழுக்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று TTD மற்றும் காவல் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தகவல்களுக்கு TTD-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் இணையதளத் தகவல்களை மட்டுமே நம்பியிருக்குமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பதியில் இந்த ஆண்டு வருடாந்திர ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் மற்றும் நவராத்திரி ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் என இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன. பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை, வருடாந்திர பிரம்மோற்சவத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதியும், நவராத்திரி பிரம்மோற்சவத்தில் அக்டோபர் 16-ஆம் தேதியும் நடைபெறுகிறது.









