கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், கொளத்தூர் தொகுதி தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், சரிபார்ப்புக்கு எடுக்கப்பட்ட சில வாக்குப்பதிவு இயந்திரங்கள், திடீரென கோளாறாகி நின்று விட்டன.
ஆறு வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களான விவிபேடுகளை ஒப்பிட்டு பாரத்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டது. முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி. பேடுகளை சரி பார்க்க உத்தரவிட வேண்டும். தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை சரிபார்க்கக் கோரி தேர்தல் முடிவுகள் வெளியான மூன்று நாட்களில், அதாவது மே 7ம் தேதியே விண்ணப்பித்துள்ளோம்.
ஆனால், தேர்தல் வழக்கு தொடர்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகே வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதால் இந்த வழக்கை தொடர்வதை தவிர வேறு நிவாரணம் இல்லை என வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் வழக்கு மட்டுமே தொடர முடியும். எனவே, இந்த வழக்கை ஏற்கக் கூடாது என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் வழக்காக மட்டுமே தொடர முடியும் என்பதால் இந்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. விவிபேட் முறைகேடு தொடர்பாக உரிய அமைப்பை அணுகி நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர்.







