ஓணம் ஸ்பெஷல் : சபரிமலை கோயில் நடை திறப்பு

ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.

மலையாளிகளின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாகும். ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நடை திறந்தார். நேற்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. நடை திறப்பை முன்னிட்டு நேற்று தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கும். வரும் 28ம் தேதி வரை நடை திறந்திருக்கும். ஓணம் பண்டிகை தினமான நாளை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தேவசம் வாரியத்தின் சார்பில் ஓண விருந்து அளிக்கப்படுகிறது. கடந்த வருடம் வரை ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்களுக்கு 3 நாட்கள் ஓண விருந்து வழங்கப்பட்டது. ஓணத்திற்கு முந்தைய நாள் மேல்சாந்தியின் சார்பிலும், ஓணம் தினத்தன்று திருவிதாங்கூர் தேவசம் வாரிய ஊழியர்கள் சார்பிலும், மறுநாள் கேரள காவல்துறை சார்பிலும் பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் இதன்பேரில் வசூல் வேட்டை நடந்ததால் இந்த வருடம் முதல் ஓணம் நாளன்று மட்டும் தேவசம் வாரியம் நேரடியாக பக்தர்களுக்கு விருந்து வழங்க தீர்மானித்துள்ளது. அன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓண விருந்து வழங்கப்படும் என்று தேவசம் வாரியம் அறிவித்துள்ளது. வரும் 28ம் தேதி இரவு 10 மணியளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும்.