அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், போகா ரேட்டன் கடற்கரைக்கு அருகே உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் சிறிய ரக இரட்டை என்ஜின் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டு விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை 23 வயதான ஃபெய்த் டென்க்லி என்ற இளம் பெண் விமானி இயக்கி வந்தார். பஹாமாஸ் தீவில் உள்ள தனது பெற்றோரை அழைத்து வருவதற்காக அவர் தனியாகப் பயணம் செய்த நிலையில், நடுக்கடலில் விமானம் விழுந்தபோதிலும் அதிர்ஷ்டவசமாக அவர் எவ்வித காயங்களுமின்றி பத்திரமாக உயிர் தப்பினார்.
நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறே இந்த விபத்திற்குக் காரணமாகும். விமானத்தின் ஒரு என்ஜின் செயலிழந்ததோடு, தரையிறங்குவதற்கான சக்கரங்களும் வேலை செய்யவில்லை என்பதை விமானி உணர்ந்தார். விமானத்தில் அதிக அளவில் எரிபொருள் இருந்ததால், அதை விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறக்க முயன்றால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படலாம் என அவர் அஞ்சினார். இதனால் விபத்தின் தீவிரத்தைக் குறைக்க முடிவெடுத்த அவர், மக்கள் நடமாட்டம் மற்றும் கட்டிடங்களைத் தவிர்த்து, நடுக்கடலில் விமானத்தை மிகவும் சாதுர்யமாகவும் பாதுகாப்பாகவும் தரையிறக்கினார். கடலில் விமானம் விழுந்த ஒரு நிமிடத்திற்குள்ளாகவே, அங்கிருந்த உயிர்காக்கும் பாதுகாவலர்கள் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டு விமானியைப் பத்திரமாக மீட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் கடலில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், இந்த எதிர்பாராத இயந்திரக் கோளாறு குறித்து அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









