தனுஷ்கோடி செல்ல தடை

ராமேஸ்வரம்: கள்ளக்கடல் எச்சரிக்கையை தொடர்ந்து, தனுஷ்கோடி செல்ல 2வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.பாக்ஜலசந்தி கடலில் பலத்த சூறைக்காற்றுடன் திடீரென கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு முன் எச்சரித்தது.

மேலும் கடலில் மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் காற்று வீசுவதோடு கடல் அலைகள் 6 அடி உயரம் வரை எழும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 17ம் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரை நிறுத்தம் செய்துள்ளனர். இதனிடையே, இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் சார்பில், கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரை மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலில் `கள்ளக்கடல் எச்சரிக்கை’ நேற்று முன்தினம் விடுக்கப்பட்டது.

எதிர்பாராத நேரத்தில் திடீரென பெரும் அலைகள் எழுவதையே `கள்ளக்கடல் எச்சரிக்கை’ என குறிப்பிடுகின்றனர். இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து, மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கப்படாது என மீன்வளத்துறை அறிவித்தது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 4வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல மண்டபம் பகுதியில் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், நாட்டுப்படகுகளும் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. கள்ளக்கடல் எச்சரிக்கையால் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது. இன்று காலை 2வது நாளாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலா வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.