ரேஷன் அட்டைதாரர்களுக்கு வாட்ஸ்-ஆப் சேவை

மாநில நுகர்வோர் சேவைக்காக தானியங்கி உரையாடல் வசதியுடன் கூடிய வாட்ஸ் ஆப் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த பின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 13 மாவட்டங்களில் மொத்தம் 31 ஆயிரம் மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட 15 சேமிப்பு கிடங்குகள் 81 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று அறிவித்தார்.புதிதாக 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 81 கோடி ரூபாயில் கட்டப்படும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு மையங்கள் மற்றும் நியாய விலை கடைகள் வரை உணவு பொருட்களின் நகர்வினை கண்காணிக்கும் வகையில், வாகன வழித்தட மேலாண்மை திட்ட அமைப்பு செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக முக அங்கீகார வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரம் 59 லட்சம் செலவில் முதல்கட்டமாக 150 நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
1500 க்கும் அதிகமான குடும்ப அட்டைகள் கொண்ட நியாய விலைக் கடைகளில், பொது மக்களின் நலன் கருதியும், முதற்கட்டமாக 150 புதிய நியாய விலைக்கடைகள் பிரித்து அமைக்கப்படும் என்றும் அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்தார்.