கடன் வாங்கியவர்கள் தவணையைச் செலுத்தத் தவறும்போது, வசூல் முகவர்கள் தொடர்ந்து அழைப்பது, மிரட்டுவது அல்லது அவமானப்படுத்துவது போன்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி கடன் வசூல் நடைமுறைகளுக்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
இந்த விதிகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளன. கடன் வசூல் நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், மரியாதையுடனும் நடைபெற வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.புதிய விதிகளின்படி, வங்கிகள் மற்றும் NBFC-களின் வசூல் முகவர்கள் கடன் வாங்கியவர் அல்லது ஜாமீன்தாரரை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொலைபேசியில் தொடர்புகொள்ளவோ அல்லது நேரில் சந்திக்கவோ முடியும்.குடும்பத்தில் மரணம் அல்லது மருத்துவ அவசரநிலை போன்ற முக்கியமான சூழ்நிலைகளில் கடன் வசூலுக்காக தொலைபேசி அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் விதிகள் கூறுகின்றன.
வசூல் முகவர்கள் கடன் வாங்கியவர்களிடம் தகாத, இழிவான அல்லது அச்சுறுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.சமூக வலைதளங்கள் மூலமாக கடன் விவரங்களைப் பகிர்ந்து அவமானப்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.மேலும், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் முகவர்களின் செயல்பாடுகளுக்கு வங்கிகளும் கடன் வழங்கும் நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும்.இதனால், அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட வசூல் முகவர்களின் தவறான நடவடிக்கைகளுக்கும் வங்கிகள் பொறுப்பேற்க வேண்டிய நிலை உருவாகிறது. EMI மூலம் வாங்கிய மொபைல், டேப்லெட் அல்லது லேப்டாப் போன்ற சாதனங்களில் கடன் தவணை செலுத்தப்படாததால் சில வசதிகளை கட்டுப்படுத்துவதற்கும் RBI விதிமுறைகள் நடைமுறையை வகுத்துள்ளன.கடன் தவணை செலுத்தப்படாத உடனேயே சாதனத்தை முழுமையாக முடக்க முடியாது. முதலில் கடன் வாங்கியவருக்கு அறிவிப்பு வழங்கப்பட வேண்டும்.30 நாட்கள் தாமதத்திற்குப் பிறகும் நிலுவைத் தொகை செலுத்தப்படாவிட்டால் மட்டுமே, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சில வசதிகளை படிப்படியாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடங்கலாம்.இந்த புதிய விதிகள் கடன் வழங்குநர்களின் பணத்தை மீட்பதைத் தடுப்பதற்காக அல்ல; அதற்கான நடைமுறை சட்டப்பூர்வமாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன.எனவே, கடன் தவணையைச் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் வங்கியுடன் நேரடியாகப் பேசி, கிடைக்கக்கூடிய தீர்வு வழிகளைப் பயன்படுத்துவது நல்லது.






