இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு பாரம்பரிய நீல நிற ஆடைக்குப் பதிலாக காவி நிறம் அறிவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நமது நாட்டில் அகிம்சை, சத்தியம் மற்றும் சகோதரத்துவம் வேரூன்றியுள்ளது என்றும், இந்த விழுமியங்களைப் பறிக்க முடியாது எனவும் கூறினார்.
இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நிறம் அறிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், ஹாக்கி சீருடைகளை மாற்றினாலும் சரி, கல்விக் கொள்கையின் மூலம் வரலாற்றை மாற்றி எழுத முயன்றாலும் சரி, இந்திய இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவர் என்றும் கூறினார். மத்திய அரசும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கல்விக்கொள்கை மூலம் வரலாற்றை மாற்ற முயல்வது போல, விளையாட்டு உடைகளின் நிறத்தையும் மாற்றி நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கு விளக்கமளித்த Hockey India அமைப்பு, இந்த மாற்றம் முதன்மையாக தொழில்நுட்ப காரணங்களுக்காக எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
சர்வதேச ஹாக்கியில் பயன்படுத்தப்படும் நீல நிற செயற்கைப் புல்வெளியுடன், பாரம்பரிய நீல நிற ஜெர்சி கலந்திருப்பதால், போட்டிகளின் போது வீரர்கள் தங்கள் சக வீரர்களைக் கண்டறிவது கடினமாகிறது என்றும், காவி நிறம் இந்திய தேசியக் கொடியின் ஒரு நிறமாக இருப்பதால் அதையும் கருத்தில் கொண்டதாகவும் ஹாக்கி இந்தியா அமைப்பு கூறியுள்ளது.









