ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 18 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலமாக கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற புதிய வரலாற்றை வைபவ் சூர்யவன்ஷி தன்வசமாக்கி இருக்கிறார்.

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பாக மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்பின் இந்திய அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி – அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் அபிஷேக் சர்மா 8 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்க, ஆட்டத்தின் கட்டுப்பாட்டை வைபவ் சூர்யவன்ஷி முழுமையாக எடுத்து கொண்டார். 2வது ஓவரிலேயே 2 சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசி அதிரடியை தொடங்கினார். இதன்பின் மீண்டும் 5வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசி தள்ளினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 66 ரன்களாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 4 சிக்ஸ், 4 பவுண்டரியுடன் 18 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். தொடர்ந்து அதிரடியாக ஆட முயன்ற அவர், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலமாக வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே 17 வயதில் ஆஃப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் 17 வயதில் அரைசதம் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி 15 வயதிலேயே முறியடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலேயே மிகக்குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான அறிமுக டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷியால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. நல்ல தொடக்கம் கிடைத்த போதும், அவரால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை. இதனால் ஜிம்பாப்வே டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷி ஒரு கை பார்த்து, இந்திய அணியில் தனது இடத்தை கெட்டியாக பிடித்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









