நாட்டில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒருபகுதியாக, தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு இன்று (ஜூலை 17) தொடங்குகிறது
இதுதொடர்பாக சென்னையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழக இயக்குநர் சுந்தரேஷ் பாபு நேற்று கூறியதாவது: நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, நடக்க உள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்பு, ‘வீட்டு பட்டியல் மற்றும் வீடு வசதி கணக்கெடுப்பு’, ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு’ என்று இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். அந்த வகையில், ஆக.1-ம் தேதி முதல் ஆக.30-ம் தேதி வரைவீட்டு பட்டியல் மற்றும் வீடு வசதிகணக்கெடுப்பு பணி நடைபெறும்.
சுய கணக்கெடுப்பு பணி, ஜூலை 17-ம் தேதி (வெள்ளி) தொடங்குகிறது. பொது மக்கள், https://se.census.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் சுய விபரங்களை பதிவேற்றம் செய்யலாம். 16 மொழிகளில் பதிவேற்றம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இப்பணிகள், வரும் 31-ம் தேதி வரை நடைபெறும். இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பான இது, தரவுகளின் துல்லியத்தன்மை, அதனை சேகரிக்கும் வேகம் ஆகியவற்றை மேம்படுத்தும்.சுய கணக்கெடுப்பு பதிவேற்றத்துக்கு பிறகு, ஒரு அடையாள எண் உருவாக்கப்படும். அதை பொது மக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.இந்த கணக்கெடுப்பின் போது, வீடுகளின் நிலை, குடிநீர் வசதி, சுகாதாரம், மின்சாரம், இணைய வசதி, சமையல் எரி பொருள் வசதி, கழிவறை வசதி, வாகனங்கள், உணவு முறை, கைபேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி உட்பட 33 கேள்விகள் கேட்கப்படும்.
வீட்டு பட்டியல் மற்றும் வீடுவசதி கணக்கெடுப்பு பணிகளுக்கு பிறகு, 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நாடுமுழுவதும் ஒரே கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். இதனுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.







