பெருநிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் மாநிலத்திலுள்ள நீர்நிலைகளைச் சீரமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2026-னை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.தமிழகத்தின் நீர்வளங்கள் பெருமளவில் பருவமழையைச் சார்ந்துள்ளதால், வறட்சி மற்றும் நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்ளவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் அரசின் முயற்சிகளோடு பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி, தன்னார்வ அமைப்புகள், மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை ஒருங்கிணைக்க இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
நீர்நிலைகளில் வண்டல் மண் அகற்றுதல், ஆழப்படுத்துதல், உள்வாய் மற்றும் வெளிவாய் கால்வாய்களைச் சீரமைத்தல், ஆக்கிரமிப்புப் புதர்களை அகற்றுதல், கரைகளை பலப்படுத்தி அசல் சரிவிற்கு கொண்டு வருதல், மற்றும் மதகுகள், உபரி நீர் அமைப்புகளைப் புனரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த 3 ஆண்டுகளில் AGAMT, MGNREGS, CSR, அரசு ஆணை 50 அல்லது இதர எந்தவொரு அரசு நிதியாதாரத்தின் கீழும் ஏற்கனவே புனரமைக்கப்பட்ட நீர்நிலைகள் இத்திட்டத்தின் கீழ் மீண்டும் தேர்வு செய்யப்பட மாட்டாது.
விருப்பமுள்ள நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியரிடம் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) 15 நாட்களுக்குள் கள ஆய்வு செய்து திட்ட இயக்குநர் (DRDA) வழியாக ஆட்சியருக்குப் பரிந்துரைப்பார்.பரிந்துரை பெற்ற 7 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கி, புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொள்ள வேண்டும்.ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் (பருவமழை தொடங்கும் முன்பே) அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட வேண்டும்.
உதவி/ஒன்றியப் பொறியாளர் நடப்பு அட்டவணை விகிதங்கள் அடிப்படையில் மதிப்பீடு தயாரிப்பார்.மதிப்பீட்டின் துல்லியத்தை உறுதி செய்ய உதவி செயற்பொறியாளர் 100% பணிகளையும், கூடுதல் மாவட்ட ஆட்சியர் மற்றும் செயற்பொறியாளர் தலா 50% பணிகளையும், மாவட்ட ஆட்சியர் 10% பணிகளையும் கள ஆய்வு செய்ய வேண்டும்.மாவட்ட ஆட்சியரிடம் நிர்வாக அனுமதியும், தகுதிவாய்ந்த அலுவலரிடம் தொழில்நுட்ப அனுமதியும் பெறுவது கட்டாயமாகும்.அனைத்துப் பணிகளும் மின்னணு ஒப்பந்தப்புள்ளி (e-Tender) முறையில் மட்டுமே வெளிப்படையாக நடத்தப்படும். நிதி பரிவர்த்தனைகளுக்காக மாவட்ட அளவில் தனி வங்கிக் கணக்கு பராமரிக்கப்படும்.
புனரமைப்புக்குத் தேவையான ஜேசிபி, பவர் ரோலர் போன்ற இயந்திரங்களை நிறுவனங்கள் இலவசமாக வழங்கலாம்.அகற்றப்படும் வண்டல் மண்ணின் அளவைக் கொண்டு எரிபொருள் தேவை மற்றும் வேலை நேரத்தை உதவிப் பொறியாளர் கணித்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி பணிகள் நடத்தப்படும்.அளவீட்டுப் புத்தகம், இயந்திர மணிநேரப் பதிவு மற்றும் எரிபொருள் நுகர்வுப் பதிவுகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு, அனைத்துப் பணிகளும் புவியிடக் குறியீடு செய்யப்பட்ட புகைப்படங்களுடன் ஆவணப்படுத்தப்படும்.
நில அளவைப் பதிவேடு வரைபடத்தின்படி எல்லைகள் அடையாளம் காணப்பட்டு, எதிர்கால ஆக்கிரமிப்புகளைத் தடுக்க எல்லைக் கற்கள் நடப்படும்.ஆட்டோ லெவல் அல்லது டோட்டல் ஸ்டேஷன் கருவிகளைக் கொண்டு 10 மீ × 10 மீ கட்டமைப்பில் சமமட்ட ஆய்வு நடத்தப்பட்டு மண் அகழ்வு அளவு கணக்கிடப்படும். குளங்கள் மற்றும் ஊரணிகளில் முதன்மைக் குளத்தின் நீளம் மற்றும் அகலத்தில் பாதி அளவில், 1 மீட்டர் கூடுதல் ஆழத்தில் ஒரு “குட்டைக் குளம்” மற்றும் அதனுடன் இணைந்த கால்வாய் அமைக்கப்பட வேண்டும்.
கரைகளில் மண் நிரப்பும் போது 25 செ.மீ தடிமனுள்ள அடுக்குகளாகப் பரப்பப்பட்டு, பவர் ரோலர் மூலம் 95% Proctor Density அளவிற்கு இறுக்கப்படுத்தப்பட வேண்டும்.மண்ணைப் பயன்படுத்தும் முறை: அகழ்ந்தெடுக்கப்படும் வண்டல் மண், களிமண் மற்றும் சவுடு ஆகியவை விவசாயிகளுக்கும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களின் வீட்டுப் பயன்பாட்டிற்கும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான மதிப்பீடு திட்டத் தொகையில் சேர்க்கப்படாது.
விவசாயிகள் தங்களது சொந்த செலவில் வண்டல் மண்ணை எடுத்துச் செல்ல தொழில்துறை அரசாணை 50-ன் கீழ் அனுமதிக்கப்படுவர்.தேர்வு செய்யப்பட்ட நீர்நிலைகள் ஊரக வளர்ச்சித் துறைக்குச் சொந்தமானவை என்பதை உதவி திட்ட அலுவலர் (உள்கட்டமைப்பு) உறுதி செய்ய வேண்டும்.ஏரியிலிருந்து வண்டல் மண் எடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதியின் காலம் 30 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.பாசன ஏரிகளில் அகழ்வின் மட்டம், நீர் தடையின்றி வயல்களுக்குச் செல்லும் வகையில் மதகின் அடிமட்டத்திற்கு கீழே செல்லக்கூடாது.ஒவ்வொரு கிராம ஊராட்சி அளவிலும் இப்பணிகளைக் கண்காணிக்க ஒரு பிரத்யேக அலுவலர் நியமிக்கப்படுவார்.
பணிகளின் தரத்தை உறுதி செய்ய கூடுதல் இயக்குநர்கள், தலைமைப் பொறியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்வர். மேலும், மாநில தரக் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு பணியையும் குறைந்தது ஒரு முறையாவது நேரில் ஆய்வு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களில் ஏதேனும் புகார்கள் அல்லது முரண்பாடுகள் இருப்பின், சம்பந்தப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரை மேல்முறையீட்டு அலுவலராக அணுகித் தீர்வு காணலாம். தேவைப்படும் பட்சத்தில் இந்த விதிகளில் மாற்றங்களைச் செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசுச் செயலாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.







