உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் ”இந்தியாவில் இணைய வசதி மிக எளிதாக கிடைப்பதால், சிறுவர்கள் உட்பட அனைவரும் ஆபாசப் படங்களை மிக எளிதாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது ஒரு கடுமையான அடிமைத்தனத்திற்கும், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது. தற்போதைய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி ஆபாச பொருட்களைப் பரப்புவதும், வெளியிடுவதும் மட்டுமே குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால், அவற்றை தனிப்பட்ட முறையில் பார்ப்பதை குற்றமாக்க எந்தச் சட்டமும் கிடையாது. எனவே, இதற்கு எதிராக ஒரு தேசியக் கொள்கையை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரபட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் எழுப்பியுள்ள இந்த விவகாரம் மிக முக்கியமானது தான் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் நீதிமன்றம் தலையிட்டு ஆராய்வதற்கு எந்தவொரு சட்ட ரீதியான கேள்வியும் இல்லை. ஆபாச படங்களைப் பார்ப்பதை தடுப்பது என்பது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகள் சார்ந்த ஒன்றாகும். ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் போன்ற நிபுணத்துவம் வாய்ந்த துறைகளே இதில் முடிவெடுக்க முடியும். எனவே இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் தனது கோரிக்கையை துறைசார்ந்த ஒன்றிய அரசு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரிகளிடம் மனுவாக தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதியளிக்கிறது என்று தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.







