ஸ்பாக்களில் சோதனை செய்ய போலீசுக்கு அதிகாரம் உண்டு

சாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி 4 பேர் தாக்கல் செய்த மனுவை மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. மேலும், ஸ்பாக்களில் காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் சோதனை நடத்துவது சட்டவிரோதம் அல்ல என்றும், அவர்கள் சட்டப்படி சோதனை நடத்த அதிகாரம் பெற்றவர்கள் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.சென்னையின் அண்ணாநகர் பகுதியில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் கடந்த 2024நவம்பர் 4ம் தேதி தேதி திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ஞானகணேஷ், முருகானந்தம், பிரேம்குமார் மற்றும் பொன்ராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.விசாரணையின்போது, அந்த மசாஜ் சென்டரின் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த அறைகளில் அசாம் மற்றும் நாகாலாந்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அரை நிர்வாண நிலையில் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது. மேலும், அந்த இடத்தில் உண்மையான மசாஜ் சேவைக்கான எந்த வசதிகளும் இல்லை என்றும், சட்டவிரோத செயல்பாடுகள் நடைபெற்று வந்ததாக சந்தேகத்தின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சம்பந்தப்பட்ட நான்கு பேரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் தரப்பில், மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்த காவல் ஆய்வாளர்  அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்றும், எனவே அவர்கள் நடத்திய சோதனையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு, பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு சிறப்பு பிரிவில் பணியாற்றும் காவல் ஆய்வாளர், ஐடிபி சட்டத்தின் கீழ் சிறப்பு காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் என்பதால், அவர் மேற்கொண்ட சோதனை சட்டப்படி செல்லத்தக்கது என்று தெரிவித்தது. மேலும், சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டர் காவல்துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறவில்லை என்றும், அதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டிருந்ததாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், உள்ளாட்சி அமைப்பின் உரிமம் பெறாமலேயே மசாஜ் சென்டர் நடத்தப்பட்டதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்தது. இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி விஜயகுமார், மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்திய காவல் ஆய்வாளர் சட்டப்படி அதிகாரம் பெற்றவரே என்றும், இந்த வழக்கில் எந்த சட்ட விதிமுறையும் மீறப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், மசாஜ் சென்டர்கள் செயல்பட காவல்துறையின் தடையில்லாச் சான்றிதழும், உள்ளாட்சி அமைப்பின் உரிமமும் கட்டாயம் பெறப்பட வேண்டும்.அவற்றை பெறாமல்  நிறுவனம் செயல்பட்டிருப்பது பதிவுகள் மூலம் உறுதியாகியுள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறிய நீதிமன்றம், மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின் மூலம், ஸ்பாக்களில் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பாக கிடைக்கும் புகார்களின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது