தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி முதன்மைத் தலைமை ஆணையர் அலுவலகம் சார்பில், சென்னையில் 9-வது ஜிஎஸ்டி (GST) தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் 9-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழா ‘எளிமைப்படுத்தப்பட்ட வரி முறை, வலுப்படுத்தப்பட்ட இந்தியா’ என்ற முதன்மைக் கருப்பொருளின் (Theme) கீழ் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி உரையாற்றிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மத்திய ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறையின் முதன்மைத் தலைமை ஆணையர் மதன் மோகன் சிங், நாட்டின் பொருளாதாரச் சூழலை மாற்றுவதில் ஜிஎஸ்டி வரிமுறையின் முக்கியத்துவம் மற்றும் அதன் அசுர வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தார். மேலும், ஜிஎஸ்டி வரிமுறையின் அடுத்தகட்ட முன்னேற்றத்தில் எதிர்பார்க்கப்படும் எந்தவொரு ஆக்கபூர்வமான மாற்றங்களையும் எதிர்கொள்ளத் துறை முழு வீச்சில் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.
விழாவில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்ற சுங்கத்துறையின் சென்னை மண்டல தலைமை ஆணையர் எஸ்.கே. விமலநாதன் பேசுகையில், “ஒரு நாட்டிற்குச் சிறந்த வரிவிதிப்பு முறை என்பது கடவுளுக்கும் அரசனுக்கும் இணையானது” என்று குறிப்பிட்டார். சங்க காலம் தொட்டு 2017-ல் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டது வரையிலான வரிவிதிப்பு வரலாற்றை சுவாரஸ்யமாக விவரித்த அவர், சரக்குகளின் தடையற்ற போக்குவரத்தில் ஜிஎஸ்டி முன்னெப்போதும் இல்லாத எளிமையை ஏற்படுத்தியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
மத்திய-மாநில ஒருங்கிணைப்பு, கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் ஜிஎஸ்டி கவுன்சிலின் செயலூக்கமிக்க பங்கு தான் இதன் வெற்றிக்குக் காரணம் என்று பாராட்டிய அவர், வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள சமீபத்திய ‘ஜிஎஸ்டி 2.0’ சீர்திருத்தங்கள் மிகச் சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹெச். சங்கர் பேசுகையில், இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகிய இரண்டும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய மைல்கற்கள் என்றார். வரி செலுத்துவோருக்கான நடைமுறைகளை எளிமையாக்கியதன் மூலம் இந்தியாவின் பொருளாதார ஒருங்கிணைப்பை இவை துரிதப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.
மேலும், வரிவிதிப்பு முறையை ஏறக்குறைய காகிதப் பயன்பாடற்றதாகவும் (Paperless), முற்றிலும் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பப் பூர்வமாகவும் மாற்றியுள்ள ஜிஎஸ்டி முறையை தொழில்துறை மனதார வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை ஆணையர்கள், ஆணையர்கள் உள்ளிட்ட ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகள் மற்றும் தற்போதைய ஜிஎஸ்டி அதிகாரிகள், ஊழியர்கள் எனப் பலர் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.









