பள்ளிகளில் சாதி பாகுபாடு வரவே கூடாது

மிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு அமைந்துள்ளது. ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட 2 மாதங்கள் நிறைவடையப் போகும் நிலையில், முதல்வர் விஜய் (CM Vijay) தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் ஆற்றிய உரையின் முக்கிய சாராம்சங்கள் பின்வருமாறு..முதல்வர் விஜய் தனது உரையில், ‘மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்; மக்களிடமிருந்து கற்றுக்கொள்’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்கள். அதுதான் நமது தாரகமந்திரம். அதற்கேற்ப அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும்.

மக்கள் மனுக்களைக் கொண்டு வரும்போது இது சாத்தியம் என்றோ, சாத்தியம் இல்லையென்றால் சரியான காரணங்களுடன் மக்களிடம் தெளிவுப்படச் சொன்னாலே அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். அரசின் சேவைகள் அவர்கள் வீட்டுக்கே போய்ச்சேர வேண்டும். அதற்கு உங்களுடைய ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன். அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு மாவட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அரசுத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்ற என்பதை அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

Transparency should be the basic principle. அதனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படலாம். தனிநபர்களின் தலையீடு இருக்காது. சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்களை கல்வித்துறை (Tamil Nadu Schools) கண்காணிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் நடைபெறும் பெரும்பாலான காயப்படுத்தல் வழக்குகள் மற்றும் கொலைகளுக்கு, நில தகராறுகளே முதன்மைக் காரணமாக உள்ளன. மாவட்ட அளவிலான நில வழக்கு தீர்வுக் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் சீரமைக்கப்பட்டு இருவார இடைவெளியில் கூட்ட வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதந்தோறும் மதிப்பாய்வு நடத்தி அதன் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டும்.

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பகுதிகள், குற்றம் அதிகமான இடங்கள், விபத்துகள் அதிகமாக நிகழும் பாதைகள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகமாக வருகைதரும் இடங்கள் என கண்டறியப்பட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் CCTV நிறுவும் இயக்கத்தை முனைப்பாக நடத்த வேண்டும். இரண்டாம்நிலை நகரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் நகர்புற சுற்றுப்புற பகுதிகளில் உள்ள Coverage இடைவெளிகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மாவட்ட அளவில் நடத்தப்படும் மாதாந்திர கூட்டங்களில் CCTV நிறுவல் தொடர்பான பணி முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும்.பெண்கள் பாதுகாப்பு ஒவ்வொரு மாதாந்திர மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நிலையான மற்றும் சமரசமற்ற நிகழ்ச்சி நிரலாக இருக்க வேண்டும். முக்கிய இடங்கள் கண்காணிப்பு, CCTV Coverage ஆகியவற்றின் முன்னேற்றம் ஒவ்வொரு கூட்டத்திலும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். அதேபோல் CoP/IGP/DIG/SP ஆகியோர் ஆய்வின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களின் புள்ளிவிவரங்கள் மட்டுமல்லாமல், விசாரணையின் தரம், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் சார்ந்தோருக்கான இழப்பீடு மற்றும் நிலுவையிலுள்ள விசாரணை வழக்குகளின் நிலை ஆகியவற்றையும் மாதந்தோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்ஸோ (POCSO) வழக்குகளில் FIR பதிவில் தாமதம் ஏற்படுவதைச் சகிக்கவே கூடாது. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் புகார்களை மறைக்கவோ தாமதமாக அனுப்பவோ கூடாது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும்.மாநிலத்தின் சில பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து அதிகளவில் பதிவாகின்றன. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் இலக்கு கொண்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
சிறார் குற்றங்களில், கும்பல் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம், குற்றங்களில் ஈடுபடும் போக்கு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி இடைநிறுத்தம் குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாக இருப்பதால், பள்ளி மற்றும் கல்வித்துறைகள் இடைநிறுத்தங்களை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும். சிறார் நீதி (JJ) சட்ட விதிகளை திறம்படப் பயன்படுத்த வேண்டும்.

கள்ளச்சாராயம் தடுப்பு குறித்து காவல், வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சட்டவிரோத மலைப்பகுதியில் சட்டவிரோத வடிகட்டல் (Illicit distillation) இடங்கள் பற்றிய தகவல் சேகரிக்க வேண்டும். சமூக அளவிலான தடுப்புக்கு உள்ளாட்சி அமைப்புகளைத் தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.