தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட பாக்யராஜ், ‘புதிய வார்ப்புகள்’ என்ற தனது குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் கதை சொல்லும் பாணியிலும், இயல்பான நடிப்பிலும் தனி முத்திரை பதித்தவர் இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ். இவரது திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருப்பதற்கு இவரது தனித்துவமான திரைக்கதை உத்தியே காரணம்.
இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் பாக்யராஜ். இன்றுவரை பல இளம் இயக்குனர்களுக்குத் திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்கு பாக்யராஜின் படங்களே பாடப்புத்தகமாக விளங்குகின்றன. இவர் தீவிரமாக சினிமாவில் இருந்து ஒதுங்கவில்லை என்றாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். அண்மையில் பாக்யராஜ் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் முடிந்தது கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் தான் இயக்குனர் பாக்யராஜ் (73) வீட்டில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் தற்போது மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. பாக்யராஜின் மரணம் திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் எஸ்.பி முத்துராமன்:மிக அதிர்ச்சியான செய்தி, பாரதிராஜாவின் உதவியாளராக இருந்து படிப்படியாக வளர்ந்தவர். திரைக்கதை மன்னன் என்று பெயர்பெற்றவரை நாம் இழந்துவிட்டோம் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரது படைப்பாற்றலுக்கு நன்றி.
ஊர்வசி:எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். இதைத் தாங்குமளவு குடும்பத்தினருக்கு கடவுள் அமைதியை கொடுக்க வேண்டும்.
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்:மூத்த தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான கே. பாக்யராஜ் அவர்கள் மறைவு, திரையுலகிற்கு பேரிழப்பாகும். தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது. அவரது திரைப்பயணம் மற்றும் மரபு, பல தலைமுறை திரைப்படக் கலைஞர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இ.பி.எஸ்: பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய பாக்யராஜ் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த பாக்யராஜ். ‘அண்ணா நீ என் தெய்வம்’ என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, ‘அவசர போலீஸ் 100’ என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.
புரட்சித் தலைவரும் பாக்யராஜ் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார். இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம் – ஸ்டாலின்
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் பாக்யராஜ்.
தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர். சில மாதங்களுக்கு முன்புதான், பாக்யராஜ் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு. அவரை இழந்து தவிக்கும் பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். தமது படைப்புகளால் பாக்யராஜ் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்.







