மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வந்தது. மேலும் திமுகவினரும் தற்போது வரை ஒன்றிய அரசு என்றே கூறி வருகின்றனர். அந்த பாணியில் விஜய்யும் தனது தேர்தல் பிரசாரம் முதல் இப்போது வரை ஒன்றிய அரசு என்று தான் மத்திய அரசை கூறி வந்தார். ஆனால் தற்போது திடீரென்று விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். ஒன்றிய அரசு என்று அழைக்காமல் மத்திய அரசு என இன்று முதல் கூற தொடங்கி உள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வென்று திமுக ஆட்சியை பிடித்தது. 2026 மே மாதம் வரை திமுக தலைவர் முக ஸ்டாலின் தான் முதல்வராக இருந்தார். ஸ்டாலின் முதல்வரான பிறகு மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று அழைக்க தொடங்கினார். அதுவரை மத்திய அரசு, நடுவணரசு என்று அழைத்து வந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒன்றிய அரசு என்று அழைக்க தொடங்கினர். இது சர்ச்சையை கிளப்பியது. ‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பது சரியா… தவறா விவாதம், ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த விவாதம் இன்று வரை முடியவில்லை. தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தங்களின் நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை. தொடர்ந்து ஒன்றிய அரசு என்றே கூறி வருகின்றனர். மாநிலங்கள் பலவும் ஒன்றிணைந்துதான் இந்தியா என்ற நாடு உருவானது. இதைத்தான் அரசியலமைப்புச் சட்டத்தில் யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்’ (Union of States) என்று குறிப்பிட்டுள்ளனர். அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், கூட்டாட்சி (Federal) எனும் வார்த்தையைத் தேர்ந் தெடுக்கவில்லை. ஒன்றியம் (Union) எனும் வார்த்தையைத்தான் தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் ஒன்றிய அரசு என்பது தான் சரி என்று அவர்கள் தங்களின் வார்த்தைக்கு நியாயம் கற்பித்து வருகின்றனர்.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பாணியை தான் தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து பின்பற்றி வருகிறார். பிரதமர் மோடியின் அரசை மத்திய அரசு, நடுவணரசு என்று அழைப்பதற்கு பதில் திமுகவினர் போல் ‘ஒன்றிய அரசு’ என்று அழைத்து வந்தார். முதல்வரான பிறகும் கூட பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை தான் பயன்படுத்தினார். ஆனால் இன்று விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்யக்கோரி பிரமதர் மோடிக்கு இன்ற முதல்வர் விஜய் கடிதம் எழுதினார். அதில் ஒன்றி அரசு என்ற வார்த்தையை விஜய் பயன்படுத்தவில்லை. அதற்கு பதில் ‘மத்திய அரசு’ என்ற வார்த்தைகளை தான் பயன்படுத்தி உள்ளார்.
மத்திய அரசுடன் மோதல் இன்றி சுமூகமாக செயல்பட தவெக அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக சட்டசபையில் முதல்வர் விஜய் உறுதியளித்தார். இதன் முதற்படியாக முதல்வர் விஜய் ஒன்றிய அரசு என்பதற்கு பதில் மத்திய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.






