எ.வ.வேலு வீட்டில் ரெய்டு..

மிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு மற்றும் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக வழக்குப் பதிவு செய்து சோதனையில் ஈடுபட்டுள்ளது.

இந்த வழக்கின் பின்னணியில், வேலையே செய்யாமல் அரசுப் பணம் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் சவாலை ஏற்று இந்த சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஊழல் வழக்கின் தொடக்கம் கடந்த 2022 ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் அளித்த புகாரிலிருந்து ஆரம்பமாகிறது. அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், திருப்பூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்டத்தில், கரூர் உபகோட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘சங்கரானந்த் இன்ஃப்ரா’ என்ற நிறுவனத்திற்கு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்திருந்தார். எந்தவொரு சாலைப் பணியும் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே, மார்ச் 2022-ல் மட்டும் 3.23 கோடி ரூபாய் நிதி முறைகேடாக விடுவிக்கப்பட்டதாக அந்தப் புகாரில் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அக்காலகட்டத்தில் இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, துறை ரீதியான விசாரணை என்ற பெயரில் கோட்டப் பொறியாளர் சத்தியபாமா, உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன் உட்பட 4 அதிகாரிகளும், ஈரோடு நபார்டு பிரிவைச் சேர்ந்த நிதிலன் உட்பட 5 அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும், லஞ்ச ஒழிப்பு போலீசார் அப்போது எந்தவொரு முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, குற்றத்திற்கான ஆதாரங்களை அழிக்கும் நோக்கில், காவல்துறையின் பாதுகாப்போடு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டுச் சேர்ந்து இரவோடு இரவாக அவசர அவசரமாக அங்கு சாலை அமைக்க முயன்றதாகவும் புகாரில் குற்றம் சாட்டப்பட்டது.

தற்போது தவெக ஆட்சிக்காலத்தில், கடந்த கால ஊழல்கள் குறித்து சட்டசபையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது திமுகவினர் “தைரியமிருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுத்துப் பாருங்கள்” என முதலமைச்சர் விஜய்க்கு சவால் விடுத்தனர். இந்த சவாலை ஏற்று, அறப்போர் இயக்கத்தின் புகார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசு கடந்த ஜூன் 23 அன்று அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஜூன் 24-ல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கரூர், திருப்பூர் உள்ளிட்ட சுமார் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.