பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியாக ஆதரவு அளித்ததற்காக, துருக்கியைச் சேர்ந்த ‘செலெபி ஏவியேஷன்’ நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை கடந்த ஆண்டு இந்திய அரசு ரத்து செய்தது.
கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் விமான நிலைய தரைவழிச் சேவை வணிகத்தில் முன்னணியில் இருந்த இந்த நிறுவனம், பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டதால் ஒரே இரவில் சுமார் 500 மில்லியன் டாலர் ரூ. 4,300 கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாக அதன் தலைவர் கனன் செலபியோக்லு தெரிவித்துள்ளார்.
டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட ஒன்பது முக்கிய விமான நிலையங்களில் பணியாற்றி வந்த அந்நிறுவனத்தின் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சுமார் 10,000 ஊழியர்கள் மற்ற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த வணிக இழப்பு மட்டுமல்லாமல், தாங்கள் நீண்டகாலமாக வளர்த்தெடுத்த கடின உழைப்பு ஒரே நாளில் வீணாகிவிட்டதாக அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மோதலின் போது, துருக்கி வெளிப்படையாகப் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியதே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் போது, துருக்கியின் ட்ரோன்கள் மற்றும் ராணுவ வீரர்களின் பங்களிப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு இந்த முடிவை எடுத்தது.இதனை எதிர்த்து செலெபி நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும், “தேசியப் பாதுகாப்பே முதன்மையானது” எனக் கூறி நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. விமான நிலையங்களின் மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் சரக்குக் கையாளுதல் பணிகளில் செலெபி நிறுவனம் ஈடுபட்டிருந்ததால், நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தச் செயலையும் ஏற்க முடியாது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.







