தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க தமிழக அரசுக்கு மனம் இல்லையா என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் பண்டிகைக் காலங்கள், விழாக் காலங்கள், தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களான சனி ஞாயிறு கிழமைகளில் சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி போன்ற நகரங்களுக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் ஒரு பயணிக்கு 3,000 ரூபாய் 4,000 ரூபாய் என அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறடுவதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த கதிர் என்பவர் ஒரு பொதுநல மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அதில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை (16.06.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், ‘ஆம்னி பேருந்துகள் கட்டணம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் 2016-ம் ஆண்டு தாமாக முன்வந்து ஒரு வழக்கை விசாரித்தது. அப்போது ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை ஒழுங்குமுறை படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்தது. ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, தனியார் பேருந்து கட்டண நிர்ணய குழுவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பெற்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற தடையை நீக்க 8 ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க அரசுக்கு மனம் இல்லையா? இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.







