2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல் முறை களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து ஆட்சியை அமைத்துள்ளது. திமுக 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அக்கட்சி தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைமைக்கு எதிராக முக்கிய நிர்வாகிள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்து நடவடிக்கை எடுத்தார். அதன் தொடர்ச்சியாக போர்க்கொடி தூக்கியவர்களில் பலர் தவெக, திமுகவில் இணைந்து வரும் நிலையில், சி.வி. சண்முகம் கட்சிக்குள் இருந்தே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலகக்குரல் எழுப்பி வருகிறார்.
அந்த வகையில் நேற்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த சி.வி.சண்முகம் பல பரபரப்பு கருத்துக்களை தலைமைக்கு எதிராக தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் சி.வி. சண்முகம் கூறியதாவது, “நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் இபிஎஸ் தலைமையில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் அதிமுக மீதான நன்மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
கேள்வி கேட்ட காரணத்தினாலே திமுகாவால் எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டு, அதனால் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. அப்படிப்பட்ட இயக்கத்தில் இன்று யார் கருத்தும் கேட்க மாட்டேன் என் குடும்பத்தார் கருத்தை மட்டுமே கேட்பேன், பணம் கொடுப்பவர் பேச்சை மட்டுமே கேட்பேன் என தலைமை செயல்பட்ட காரணத்தால் தான் இந்த பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
தோல்விக்கான காரணத்தை எடப்பாடி பழனிசாமியைத் தவிர அனைவரும் உணர்ந்துள்ளனர். திமுக என்ற தீய சக்தியை ஒழிக்க வேண்டும் என்று தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. அப்பட்ட திமுகவோடு இணைந்து முதல்வராக வேண்டும் என்று நினைத்த போதே அதிமுக தனது சுயநிலையை இழந்து நிற்கிறது.
அதிமுகவுக்காக அனைத்தையும் இழந்தவர்கள் இயக்கத்தை விட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். அவர்களை துரோகி என்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக பெருமையாக பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த 47 இல் 31 தொகுதிகள் வட மாவட்டங்களில் உள்ளது. அது பாமக போட்ட பிச்சை.பாமக கூட்டணி இல்லை என்றால் சேலத்தில் உள்ள எடப்பாடி தொகுதியில் கூட இபிஎஸ் கஷ்டப்பட்டு தான் வெல்லும் நிலை ஏற்பட்டிருக்கும். இந்த உண்மையை ஒப்புக் கொண்டு சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் அதிமுகவை நம்பியுள்ள தொண்டர்களை காப்பாற்ற முடியும்.அதிமுக இன்று ஒரு குடும்பத்தின் பிடியில் சென்று கொண்டிருக்கிறது. பழனிசாமி தனது மகன் மிதுனை அரசியலுக்கு கொண்டு வர நாடகம் போடுகிறார். நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தவறு இல்லை. ஆனால், நாடகம் ஏன் போடுகிறீர்கள். தோல்விக்கான காரணத்தை ஆராயுங்கள்.
1996 தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்ற ஜெயலலிதா 2 ஆண்டுகளில் வெற்றிக் கூட்டணியை அமைத்து வென்று காட்டினார். எனவே, கனவு உலகத்தில் இல்லாமல் உண்மையை உணருங்கள். 8 ஆண்டுகளாக நீங்கள் சொன்னதை தான் கேட்டு செயல்பட்டோம். அதற்கான பலனை தான் தற்போது அனுபவிக்கிறோம்.அதிமுக காப்பாற்றப்பட வேண்டும். எனவே, பொதுக் குழு கூட்டத்தை கூட்டுங்கள். பொதுக்குழு இல்லை என்றால் செயற்குழு கூட்டத்தை கூட்டுங்கள். இல்லை என்றால், அடுத்த கட்ட வழிமுறைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். எங்களை அந்த நிலைக்கு தள்ளாதீர்கள்.” என்றுள்ளார்.






