பயிர் கடன் தள்ளுபடி வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ‘5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்.
5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்.’ என்று வாக்குறுதி அளித்து விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், “கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ. 50,000த்திற்குள் கடன் பெற்றிருந்தால் மட்டுமே முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும்; 1 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ள விவசாயிகளுக்கு ரூ. 5,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்” என்றும் அறிவித்து விவசாயிகளை ஏமாற்றி உள்ளது த.வெ.க. அரசு.
மேலும், மக்கள் ஒவ்வொரு நாளும் வேதனை அடையும் வகையில், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை சரிசெய்வதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், முகம் சுளிக்கும் வகையில் அர்த்தமற்ற காரணங்களை த.வெ.க. அரசு கூறி வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். ஆட்சிக்கு வந்த குறுகிய நாட்களிலேயே, விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களை த.வெ.க. அரசு பல்வேறு வகைகளில் வஞ்சித்து, ஏமாற்றி வருவது கண்டனத்திற்குரியதாகும்.






