தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம்

வெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வெற்றி தமிழகம் என்ற பெயரில் 436 தொலைநோக்கு திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிமுகம் செய்துள்ளார்.அமைச்சர்கள் யாரும் தவறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட முதல்வர் விஜய், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தவும் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்பில் ஒவ்வொரு துறைக்கும் தொலைநோக்கு திட்டங்களை முதலமைச்சர் விஜய் ஒதுக்கி உள்ளதாக கூறினார்.

இளைஞர் மேம்பாடு, பெண்கள் மேம்பாடு என அனைத்து துறைகளுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகபட்சமாக தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு 37 திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். துறைவாரியாக ஆய்வுசெய்து இந்தத் திட்டங்களுக்கு முழு வடிவம் தந்து முதலமைச்சரிடம் ஒப்புதல் பெறப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.மேகதாது பிரச்னையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் குறித்து இன்று அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, தமிழக அமைச்சர்கள் துறை ரீதியாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெறும் வாக்குறுதிகளாக இல்லாமல், மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் மட்டுமே தேர்தல் வாக்குறுதிகளாக அளித்துள்ளதாக முதலமைச்சர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர்கள் யாரும் தவறு செய்ய வேண்டாம் என்றும், தவறு செய்பவர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமைச்சர்கள் தங்களுக்கு கீழ் பணியாற்றுவோரையும் தவறு செய்யாத வகையில் பார்த்து கொள்வது அவசியம் என்று அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. Clean Government ஆக பணியாற்றுவதே இலக்கு என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.