ஒருவர் மேல் ஒருவர் போட்ட வழக்குகளை வாபஸ் பெற்ற இபிஎஸ், ஓபிஎஸ்!

மிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய திருப்பமாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த முக்கிய வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

முன்னாள் முதலமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்களது வழக்குகளை திரும்ப பெற்றுள்ளனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியிலிருந்து தன்னை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபிஎஸ் தரப்பில் சிவில் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேபோல, கட்சியின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் முடிவுகளில் ஓபிஎஸ் தலையிட தடை விதிக்கக் கோரி ஈபிஎஸ் தரப்பில் தொடரப்பட்டிருந்த வழக்கும் தற்பொழுது வாபஸ் பெறப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவின் ஒற்றை தலைமை போட்டி காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்திலும், சிவில் நீதிமன்றத்திலும் இரு தரப்பினரும் மாறி மாறிப் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த சூழலில், இரு தரப்புமே தங்களின் உட்கட்சி வழக்குகளை திரும்பப் பெற்றுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் களம் மற்றும் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் அரசியல் விமர்சகர்கள் இதனை உற்றுநோக்கி வருகின்றனர்.