கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போதைய த.வெ.க அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்சாரத் துறையின் மந்தமான நிர்வாகத் திறமையின்மை குறித்து அடுக்கடுக்கான கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் மாநிலத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
தன்னை யாரோ மிரட்டுவதாகத் தற்போதைய அமைச்சரே பொதுவெளியில் ஒப்புக்கொள்கிறார். மிரட்டல் இருப்பதாக அமைச்சரே சொல்லும் பட்சத்தில், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது. அமைச்சருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவினால், சாமானிய மக்களின் பாதுகாப்பிற்கு யார் உத்தரவாதம் கொடுப்பது?
சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தங்களின் துறை குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ளாமலும், எதையும் ஆழமாக ஆராயாமலும் பேசி வருகின்றனர். உயர்மட்ட அதிகாரிகளை மட்டுமே குளிர்சாதன அறைக்குள் சந்திக்கும் அமைச்சர், களத்தில் உழைக்கும் அடுத்தகட்ட ஊழியர்களைச் சந்தித்து ஆலோசிக்க மறுப்பது ஏன்? மாநிலம் முழுவதும் மின் விநியோகத்தில் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வருகின்றன. இதனைச் சீராக்குவதற்கு ஒரு முறையான ஆய்வுக் கூட்டத்தைக் கூட தற்போதைய அரசு நடத்தவில்லை. உடனடியாகக் கூட்டங்களைக் கூட்டி மின்வெட்டுக்கான நிரந்தரத் தீர்வை உடனே காண வேண்டும். மின்சாரத்துறை சார்ந்த டெண்டர்களைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் மூன்று முக்கியக் குழுக்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. எனவே, இந்த டெண்டர் நடைமுறைகளில் யாரும் அவ்வளவு எளிதாக முறைகேடு செய்துவிட முடியாது.
நாங்கள் முந்தைய ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோதே மின்வாரியம் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனில் தான் மூழ்கியிருந்தது. அதை விடுத்து, தற்போதைய தலைமை அலுவலக ஹார்டு டிஸ்க் திருட்டுப் பிரச்சினையை வைத்துப் பழிசுமத்தாமல், திருடிய சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அரசு உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.”மின்வாரியத்தின் தற்போதைய மந்தநிலையையும், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு ஓட்டைகளையும் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு, தற்போதைய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








