சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகளை மொத்தமா தூக்கிய விஜய்

சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பான புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமையகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது மாநகராட்சி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியின் உத்தரவின்பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் உள்ள மத்திய நகரமைப்புப் பிரிவில் பணியாற்றிய கண்காணிப்புப் பொறியாளர், செயற்பொறியாளர், உதவிச் செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் பிற துறைகளுக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக மற்ற துறைகளில் இருந்த அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறை மிகவும் முக்கியமானது. 1,000 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டுமானத் திட்டங்கள் அனைத்தும் தலைமையக நகரமைப்புப் பிரிவில்தான் அனுமதி பெற வேண்டும். சொத்து ஆவணங்கள், பட்டா, சிட்டா, வில்லங்கச் சான்று, கட்டிடக் கலைஞர் வரைபடம், மண் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட அத்தனை ஆவணங்களையும் சமர்ப்பித்த பின்னரும், பல விண்ணப்பங்கள் மாதக்கணக்கில் நிலுவையில் இருந்ததாக புகார்கள் குவிந்தன. இதனால் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

ககன்தீப் சிங் பேடி, முன்பு சென்னை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றியவர் என்பதால், இங்கு நடைபெறும் முறைகேடுகள் குறித்து நன்கு அறிந்தவர். கடந்த சில ஆண்டுகளாக சில அதிகாரிகள் ஒரே பதவியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்ததும், அரசியல் தலையீடுகள் காரணமாக அவர்களை மாற்ற முடியாத நிலையும் இருந்தது. தற்போது அரசு மாறிய பின்னர், இந்த அதிகாரிகளின் நீண்டகால ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த ஒட்டுமொத்த இடமாற்றம் மாநகராட்சி வரலாற்றில் முதல் முறையாகும். இனிமேல் விதிகளுக்கு உட்பட்டு, இரண்டு நாட்களுக்குள் கட்டிட அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். அனுமதிக்குப் பின் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சீல் வைக்கும் நடவடிக்கையும் கடுமையாக எடுக்கப்படும்” என்றார்.

மேலும், மண்டல அலுவலகங்களில் கட்டிட அனுமதி வழங்கும் அதிகாரிகளும் விரைவில் மாற்றப்பட உள்ளனர். பொறியியல், சுகாதாரம், மருத்துவம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் இருக்கும் அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்களும் விரைவில் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.

ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், குடிநீர் விநியோகத்தில் தடையின்மை, லாரி மூலம் குடிநீர் விநியோகத்தின் தரக்கட்டுப்பாடு, கட்டுமானப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், ஒப்பந்தங்களில் முழு வெளிப்படைத்தன்மை ஆகியவை முக்கிய இடம் பெற்றுள்ளன. அதிகாரிகள் தொடர்ந்து கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கை சென்னை மாநகராட்சியில் நிர்வாக சீர்திருத்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் கட்டிட அனுமதி விண்ணப்பங்கள் இனி விரைவாகவும், லஞ்சமின்றியும் கையாளப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.