மோடி – மெலோனி சந்திப்பு

முக்கிய துறைகளில் இந்தியா – இத்தாலி உறவு மேலும் ஆழப்படுத்தப்படும் என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சிறப்பு மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்படும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், இரு தலைவர்களும் இணைந்து எழுதிய ஊடகக் குறிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.அதில் அவர்கள் கூறி இருப்பதாவது: சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா – இத்தாலி உறவு முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் விரிவடைந்து தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, ஒரு சுமூகமான நட்பிலிருந்து சுதந்திரம், ஜனநாயகம், எதிர்காலத்துக்கான ஒரு பகிரப்பட்ட பார்வை ஆகிய விழுமியங்களில் வேரூன்றிய ஒரு சிறப்பு மூலோபாயக் கூட்டாண்மையாக உருவெடுத்துள்ளது.உலக ஒழுங்கு ஆழமான மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் இந்த காலக்கட்டத்தில், இந்தியா – இத்தாலி கூட்டாண்மை மிக உயர்ந்த அரசியல் மட்டங்களில் நடைபெறும் பரிமாற்றங்களால் வழிநடத்தப்படுகிறது. இரு நாடுகளின் பொருளாதார ஆற்றல், பல நூற்றாண்டுகள் பழமையான நாகரீக ஞானம் ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் இந்த கூட்டாண்மை ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்று வருகிறது. 21-ம் நூற்றாண்டில் செழிப்பும் பாதுகாப்பும் நாடுகளின், புதுமைகளைப் புகுத்தும் திறன், எரிசக்தி மாற்றங்களை நிர்வகிக்கும் திறன், மூலோபாய இறையாண்மையை வலுப்படுத்தும் திறன் ஆகியவற்றை பொறுத்தே அமையும்.புதிய இலக்குகளை பின்பற்றுவதன் மூலமும், ஒன்றுக்கொன்று ஆதரவாக இருப்பதன் மூலமும் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவறத்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இத்தாலியின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் திறனுக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, பொறியியல் திறமை, அளவு, புத்தாக்கச் சூழலமைப்பு, தொழில்முனைவோர் பலம் ஆகியவற்றுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பை உருவாக்க இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.இந்த கூட்டாண்மை என்பது வெறும் பலங்களின் ஒருங்கிணைப்பு மட்டுமல்ல, இரு நாடுகளின் தொழில்துறைத் திறன்கள் ஒன்றையொன்று பூர்த்தி செய்து வலுப்படுத்தும் ஒரு கூட்டு மதிப்பு உருவாக்கமாகும். இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே முன்மொழியப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளிடையே அதிக வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பரிமாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
பாதுகாப்பு, விண்வெளி, தூய்மையான தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள், வாகன உதிரி பாகங்கள், ரசாயணங்கள், மருந்துகள், ஜவுளி, வேளாண் உணவுப் பொருட்கள், சுற்றுலா போன்ற துறைகளில் கவனம் செலுத்தி 2029ம் ஆண்டுக்குள் 20 பில்லியன் யூரோக்கள் (ரூ.2.25 லட்சம் கோடி) இருதரப்பு வர்த்தக இலக்கை அடைவதிலும் அதைத் தாண்டுவதிலும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இவ்வாறு இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.