பாஜக நடிகைகள் குறித்து ஆபாச பேச்சு… மன்னிப்பு கோரிய சைதை சாதிக் – முன்ஜாமீன் தந்த உயர் நீதிமன்றம்..!

சென்னை: பாஜகவில் உள்ள நடிகைகளை ஆபாசமாகப் பேசிய விவகாரத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் மன்னிப்பு கோரியுள்ளார்.

சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த திமுக கூட்டம் ஒன்றில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்டச் செயலாளர் இளைய அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் கலந்து கொண்டு பேசி இருந்தார்.

அவரது பேச்சு மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியது. அதிலும் பாஜகவில் உள்ள நடிகைகளை ஆபாசமாக அவர் விமர்சித்துப் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய சைதை சாதிக் முதலில் எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடினார். குறிப்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மத்திய அமைச்சர் அமித் ஷாவை கடுமையாகச் சாடினார். அதன் பிறகு பாஜகவில் உள்ள நடிகைகளைத் தகாத முறையில் விமர்சித்துப் பேசினார். அதிலும் குறிப்பாக பாஜகவில் உள்ள குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கவுதமி ஆகிய நடிகைகளைத் தரம் தாழ்ந்து விமர்சித்துப் பேசினார். இதற்கு அப்போது மிகப் பெரியளவில் கண்டனங்கள் எழுந்தன.

இது குறித்து திமுக மகளிரணி தலைவர் கனிமொழியை டேக் செய்து நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியிருந்தார். குஷ்பு தனது ட்விட்டரில், ‘பெண்களை ஆண்கள் இழிவுபடுத்தும்போது, அவர்கள் எந்த மாதிரியான மோசமான சூழலில் வளர்ந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த ஆண்கள்தான் தங்களைக் கருணாநிதியின் சீடர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். இதுதான் முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியா?” எனக் கேட்டிருந்தார்.

இதற்கு மன்னிப்பு கேட்ட திமுக எம்பி கனிமொழி, இதைச் சகித்துக்கொள்ளவே முடியாது என்றும் முதல்வர் ஸ்டாலினும் திமுகவினரும் இதை ஆதரிக்க மாட்டார்கள் என்றும் பதிவிட்டிருந்தார். இதற்கிடையே சைதை சாதிக் விவகாரம் தொடர்பாக போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சைதை சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, சம்மந்தப்பட்டவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டும் இனி இப்படிப் பேச மாட்டேன் என்று கூறியும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இன்று அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சைதை சாதிக் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். மேலும், இனிமேல் இதுபோல பேச மாட்டேன் என்றும் அவர் தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், சைதை சாதிக்கிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதேநேரம் விசாரணை அதிகாரி முன்பு ஒரு வாரம் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்து உள்ளது.