கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதைத் தடுப்பதற்கு கேரளாவில் உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் யோசனை முன்வைத்து முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து 500 மீட்டர் தூர எல்லைக்குள் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த பகுதிகளில் உள்ள எஃப்.எல்-2 மற்றும் மனமகிழ் மன்றங்கள் வழியாக மதுபானங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனையும் தடுத்தால்தான் அரசின் நோக்கம் நிறைவேறும். இல்லையென்றால், அரசின் நடவடிக்கை அரசு கடைகளை மூடிவிட்டு, தனியார் மதுபான வியாபாரத்தை ஊக்குவிப்பதாக அமையும்.மதுபானக் கடைகளில் அதிகபட்ச சில்லறை விலைக்கும் கூடுதலாக ரூ.10-ம் அதற்கு மேலும் விற்கப்படும் புகார் தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. மதுக்கடைகளின் நிர்வாகச் செலவினங்களை டாஸ்மாக் நிர்வாகம் முறையாகவும், முழுமையாகவும் ஏற்காமல், அதை கடை பணியாளர்களே மேற்கொள்ள வேண்டும் என வாய்வழி வழங்கிய உத்தரவு காரணமாக ஏற்பட்டுள்ள குறைபாடுகள்தான். இந்த முறைகேடுகளுக்கு வழி வகுத்துள்ளது. இதைத் தடுக்க, கேரள அரசு நடத்தும் மதுபானக் கடைகளில் கடைபிடிக்கப்படும் நிர்வாக விதிமுறைகளை (பில் போட்டு பணம் பெறுதல்) தமிழக அரசு பின்பற்றி டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டுமென்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறோம். இது தவிர இரவு 10 மணிக்கு மேல் பணியாளர்கள் ஒரு விநாடிகூட கடைகளுக்குள் இருக்கக் கூடாது என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் மாநகர காவல் ஆணையர்கள் உத்தரவிட்டு, தீவிரமாக அமல்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது பணியாளர்களுக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது என்பதை அரசு கருத்தில்கொள்ள வேண்டும்.
மது விற்பனை முறையில் கணினிமயமாக்கல் போன்ற நடைமுறைகள் இருப்பதால் கடைசி விநாடி வரை விற்பனை செய்ய வேண்டும். விற்பனையை முடித்த பிறகு, 30 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை கணக்குகளை சரிபார்த்து இறுதி செய்ய காலஅவகாசம் தேவைப்படும். இதை கவனத்தில் கொண்டு, மதுக்கடைகளை மூடுவது குறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உத்தரவு வழங்குவது அவசியமாகும்” என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







