வெற்றி வாகை சூடினார் விஜய்!

மிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தாக்கல் செய்தது.பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெற்ற இந்த விவாதத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தங்களது ஆதரவையும், கடுமையான விமர்சனங்களையும் பதிவு செய்தனர்.தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. அதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த நிலையில் அனைத்து கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் தீர்மானத்தின் மீது பேசினர்.

காங்கிரஸ்: அக்கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். வெறுப்பு அரசியலைத் தவிர்க்கவும், 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மதுவிலக்கு போன்ற திட்டங்களை வரவேற்றும் இந்த ஆதரவை வழங்குவதாகக் காங்கிரஸ் தெரிவித்தது.

விசிக: பாஜகவின் ஆளுநர் ஆட்சித் திட்டத்தைத் தடுக்கவே ஆதரவு அளிப்பதாக வன்னி அரசு தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள்: சிபிஐ  மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் மத்திய அரசின் தலையீட்டைத் தடுக்கவும், பாஜகவை எதிரியாகப் பிரகடனப்படுத்தியதாலும் ஆதரவு வழங்கின.

IUML: மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், பாஜகவின் சித்து விளையாட்டுகளைத் தவிர்க்கவும் ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தது.

தனிநபர் ஆதரவு: அமமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ், முதலமைச்சர் விஜய்யை “அவதார தலைவர்” என்று புகழ்ந்து தனது ஆதரவைப் பதிவு செய்தார்.

தேமுதிக: தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சரின் பட்டினப்பாக்கம் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு சென்ற நபர் யார் என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கியதை “ராஜகுரு” நியமனம் என்று கூறி வன்மையாகக் கண்டித்தார்.

தமிமுன் அன்சாரி, ஜோதிடரை அரசியல் பிரிவு அலுவலராக நியமித்ததைக் கண்டித்ததுடன், தனிப்பட்ட நம்பிக்கைகளை அரசுமயமாக்கக் கூடாது என்றார்.

ஜவாஹிருல்லா, சமூக நீதியைக் காக்கவும், அமைச்சரவையில் இஸ்லாமியர்களுக்கு இடம் வழங்கவும் வலியுறுத்தினார்.

கொமதேக: தவெக ஆட்சியின் நிலையற்ற தன்மையைக் காரணம் காட்டி இந்தத் தீர்மானத்தை எதிர்ப்பதாக நித்தியானந்தன் அறிவித்தார்.

பாஜக எம்.எல்.ஏ போஜராஜன், தங்கள் கட்சி இந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கும் என்று அறிவித்தார்.

இதன் பின்னர் டிவிஷன் பெஞ்ச் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் அரசுக்கு ஆதரவாக 144 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். திமுக வெளிநடப்பு செய்து விட்ட நிலையில், அவையில் இருந்தவர்களில் 22 பேர் எதிராக வாக்களித்தனர். 5 பேர் வாக்களிப்பிலிருந்து விலகி இருப்பதாகக் கூறினர்.இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் முதல்முறையாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.