தவெகவுக்கு ஆதரவு தந்த எஸ்.பி. வேலுமணி தரப்பு… கூச்சல் எழுப்பிய இபிஎஸ் தரப்பு

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டசபையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பல்வேறு கட்சிகள் தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாடுகளை பதிவு செய்தன. முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்தன.

நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து பாமகவின் 4 எம்எல்ஏக்களும், பாஜகவின் ஒரு எம்எல்ஏவும் விலகி உள்ளனர். தொடர்ந்து அவையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “முதல்வர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தை அதிமுக எதிர்க்கிறது. எங்கள் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு எதிராகவே வாக்களிப்பார்கள்” என்று தெளிவாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கியதும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் கூச்சல் மற்றும் அமளி நிலவியதால் சில நிமிடங்கள் பரபரப்பான சூழல் உருவானது. குறிப்பாக, சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே பேசிய எஸ்.பி.வேலுமணி எங்கள் தரப்பு தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். அவையில் பேசிய அவர், “மக்கள் வழங்கிய தீர்ப்பை மதித்தே இந்த ஆதரவை தெரிவிக்கிறோம். எந்த பதவிக்கும் ஆசைப்பட்டு ஆதரவு அளிக்கவில்லை” என்று தெரிவித்தனர்.