புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்பு

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.இதையடுத்து இன்று காலை 9.47 மணிக்குப் புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உள்ளது. இங்கு 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 16 தொகுதிகளில் வென்றால் மெஜாரிட்டி கிடைக்கும். 2026ம் ஆண்டுக்கான புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ம் தேதி நடந்தது.

மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இங்கு காங்கிரஸ் – திமுக கூட்டணி, என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி, விஜய்யின் தவெக – நேயம் மக்கள் கழகம் கூட்டணி, சீமானின் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவியது.இதில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி மீண்டும் வென்று ஆட்சியை தக்கவைத்தது. இந்த கூட்டணி மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது மெஜாரிட்டியை விட 2 இடங்கள் கூடுதலாகும். கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் 12, பாஜக 4, எல்ஜேகே எனும் லட்சிய ஜனநாயக கட்சி, அதிமுக ஆகியவை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன.மறுபுறம் காங்கிரஸ்- திமுக கூட்டணி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், திமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. விஜய்யின் தவெக – நேயம் மக்கள் கழகம் கூட்டணி 3 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் தவெக 2 தொகுதிகளிலும், நேயம் மக்கள் கழகம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. 3 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். சீமானின் நாம் தமிழர் கட்சி 1.36 சதவீத வாக்குகள் பெற்றாலும் கூட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.இதன்மூலம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளார். இதையடுத்து அவர் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சியமைக்க அழைத்தார். அதன்படி இன்று காலையில் புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று காலை 9.47 மணிக்குப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதல்வராகும் ரங்கசாமி மற்றும் புதிய அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.