நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் 2026 தேர்வு முறைகேடு மற்றும் பேப்பர் லீக் விவகாரத்தில், தற்போது சிபிஐ தனது அதிரடி வேட்டையைத் தொடங்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த பி.ஏ.எம்.எஸ் மாணவர் சுபம் கைர்னார் என்பவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர் டெலிகிராம் செயலி மூலம் கசிந்த வினாத்தாளை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, பின்னர் அரியானாவைச் சேர்ந்த ஒருவருக்கு 15 லட்சம் ரூபாய்க்குத் தாரை வார்த்துள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதற்கிடையே, வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ராஜஸ்தான் சிட் மற்றும் குருகிராம் குற்றப்பிரிவு போலீசார் இணைந்து யாஷ் யாதவ் என்ற இளைஞரைச் சிக்க வைத்துள்ளனர். சுமார் 22 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடிய இந்தக் கும்பலின் பின்னணியில் உள்ள பெரிய தலைகளைத் தூக்க சிபிஐ நாடு முழுவதும் தனது சிறப்புப் படைகளை ஏவியுள்ளது. இந்த மோசடி இத்துடன் நின்றுவிடாமல், சுமார் 150 மாணவர்கள் மற்றும் 70 பெற்றோர்களுக்கு ‘கெஸ் பேப்பர்’ என்ற பெயரில் வினாத்தாள் முன்கூட்டியே சென்றது கண்டறியப்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், நீட் தேர்வில் கேட்கப்பட்ட அதே 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் அப்படியே அந்த கெஸ் பேப்பரிலும் இருந்துள்ளது.
இது தற்செயலானது அல்ல, நன்கு திட்டமிடப்பட்ட சதி என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது 13 எம்பிபிஎஸ் ஆலோசகர்களும் சிபிஐ பிடியில் சிக்கியுள்ளனர். ஒரு பக்கம் மத்திய அமைச்சரின் ராஜினாமா கோரிக்கைகள் வலுக்க, மறுபக்கம் சிபிஐ-யின் இந்த அதிரடி கைதுகள் நீட் தேர்வின் நம்பகத்தன்மை மீதே மிகப்பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.மாணவர்களின் பல ஆண்டுகால உழைப்பு, பணத்தாசை பிடித்த சில புரோக்கர்களால் கேள்விக்குறியாகியுள்ளது ஒட்டுமொத்த தேசத்தையும் கொதிக்க வைத்துள்ளது.








