மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த தற்காலிகப் போர் நிறுத்தம் கேள்விக்குறியாகும் வகையில், ஈரானின் முக்கியத் துறைமுகங்கள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. போர் பதற்றம் தணிந்து வருவதாகக் கருதப்பட்ட சூழலில், இந்தத் திடீர் நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் முக்கியமான கடல்சார் வணிகத் தளங்களான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) மற்றும் கேஷ்ம் துறைமுகங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இவை ஹோர்முஸ் நீரிணையை ஒட்டியுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகும். பாக்ஸ் நியூஸ் செய்தியாளர் ஜெனிபர் கிரிஃபின், அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரான் இந்த முக்கியமான கடல்வழிப் பாதையை மூடி மக்னடிக் மைன்களை வீசியதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. “ஈரான் உடன்படாவிட்டால் குண்டுவீச்சு தொடங்கும்” என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.ஈரானிய எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலுமாக முடக்க அமெரிக்கா மேற்கொண்டுள்ள பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாகவே இத்துறைமுகங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலை ஒரு முழு அளவிலான போரின் தொடக்கமாகக் கருத வேண்டாம் என்று அமெரிக்கத் தரப்பு கூறியுள்ளது. அதிபர் டிரம்ப் இதனை ஒரு “லவ் டேப்”, அதாவது ஒரு சிறிய எச்சரிக்கை நடவடிக்கை – என்று வர்ணித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் இருப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கு ஈரானை பணிய வைக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமெரிக்கா கூறுகிறது.
அமெரிக்கா போர் நிறுத்த விதியை மீறிவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. ஒருபுறம் தாக்குதல் நடந்தாலும், மறுபுறம் பாகிஸ்தான் நாட்டின் உதவியுடன் இரு நாடுகளும் 15-20 நாட்கள் நீடிக்கக்கூடிய ஒரு புதிய அமைதி ஒப்பந்தத்தை எட்ட முயற்சி செய்து வருகின்றன.






