இனி போலீசார் லத்தியை கையில் எடுத்தால் அவ்வளவுதான்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் விசாரணை முறைகளை முற்றிலுமாக மாற்றியமைக்க உயர் அதிகாரிகள் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, காவல் நிலையங்களில் விசாரணையின்போது பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள், பிளாஸ்டிக் குழாய்கள் போன்றவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

ஆய்வாளர்களின் முறையான அனுமதியின்றி எந்தவொரு காவலரும் லத்தியை கையில் எடுக்கக்கூடாது. ஆய்வாளர் அல்லது டி.எஸ்.பி ஆகியோரின் நேரடி கண்காணிப்பு இன்றி எந்தவொரு நபரிடமும் விசாரணை நடத்தப்படக் கூடாது. தற்போதைய சூழலில் அறிவியல் ரீதியான புலனாய்வு முறைகள் வளர்ந்துவிட்ட நிலையில், பழைய பாணியிலான அடிதடி முறைகளை முற்றிலும் கைவிட வேண்டும்.

இது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் கூறுகையில்,கைது செய்யப்பட்ட ஒருவரை அடித்துத்தான் உண்மையை வரவழைக்க முடியும் என்று நம்பும் போலீசார், இந்தப் பணிக்கே தகுதியற்றவர்கள். ஒருவரை உடல்ரீதியாக துன்புறுத்த போலீசாருக்கு எவ்வித அதிகாரமும் சட்டத்தில் வழங்கப்படவில்லை,” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு ஒருபுறம் வரவேற்கப்பட்டாலும், மறுபுறம் போலீசார் கொல்லப்பட்ட வழக்குகளில் இதே போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளனவா? என ஒரு தரப்பு போலீசார் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும், மனித உரிமை மீறல்களைத் தவிர்க்க இந்த விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.