சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயரும் இருக்கு. அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை தற்போது அறிவிக்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன், வானதி சீனிவாசன், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பிற முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது தேர்தலில் யாரையெல்லாம் களமிறக்குவது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு மொத்தம் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தொகுதிக்கு 3 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பட்டியல் டெல்லியில் உள்ள பாஜக மேலிட தலைவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒப்புதல் அளித்த பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தான் மையக்குழு கூட்டத்தை முடித்து நயினார் நாகேந்திரன் வெளியே வந்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள், ”வரும் சட்டசபை தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? என்ற கேள்வியை முன்வைத்தனர். அதற்கு நயினார் நாகேந்திரன், ”வேட்பாளர் பட்டியலில் அவருடைய (அண்ணாமலை) பெயரும் உள்ளது” என்றார்.
அதன்பிறகு பத்திரிகையாளர், ”எந்த தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுகிறார்?” என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு நயினார் நாகேந்திரன், ”எந்த தொகுதி என தற்போது அறிவிக்க முடியாது. தொகுதிக்கு ஏற்ப தகுதியான வேட்பாளர்களை பாஜக தலைமை தேர்வு செய்யும். இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர்களை அறிவிப்போம். வரும் ஏப்ரல் 4ம் தேதி சென்னைக்கு பிரதமர் மோடி வருகிறார்” என்றார்.
மேலும் பாஜகவின் மையக்குழு கூட்டத்துக்கு அண்ணாமலைக்கு முன்கூட்டியே அழைப்பு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் இன்று அண்ணாமலை புதுச்சேரியில் இருந்தார். புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி அவர் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் திடீரென்று பியூஸ் கோயல் சார்பில் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பாஜகவின் மையக்குழு கூட்டத்தில் பங்கேற்க வரும்படி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணாமலை அவசரஅவசரமாக அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை வந்து கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில் தான் அண்ணாமலையை பாஜக மேலிடம் சமாதானம் செய்திருக்கலாம் என்றும், பாஜகவுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் களமிறங்கலாம் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.இதனால் அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிடுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பாஜக மேலிடத்தை பொறுத்தவரை அண்ணாமலைக்கு தமிழகத்தில் அதிக செல்வாக்கு உள்ளது. இதனால் அவரை ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வைக்க வேண்டும் என்று நினைக்கிறது.அண்ணாமலை போட்டியிடுவது என்பது பாஜக மற்றும் அதிமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமையும் என கணக்கு போடுவதாக கூறப்படுகிறது.
இதனால் அண்ணாமலையை சமாதானம் செய்ய பாஜக மேலிடம் சில நடவடிக்கைகைள எடுத்த நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் அண்ணாமலை சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறாரா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக அதிமுக – பாஜக கூட்டணியில் அண்ணாமலை போட்டியிட விரும்பவில்லை என்று கட்சி மேலிடத்திடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அண்ணாமலை கோவை சூலூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அவர் போட்டியிட விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தொகுதிகளும் பாஜகவுக்கு வழங்கப்படவில்லை. இதனால் அண்ணாமலை அதிருப்தியடைந்து தேர்தலில் போட்டியிடாமல் விலக விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.








