தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை விஜய் அறிவித்து வருகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே இருக்கிறது. தேர்தல் நாள்கள் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழல தொடங்கியுள்ளன.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்க திமுக கூட்டணியும், மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுகவும், போட்டியிடும் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என விஜய்யின் டிவிகேவும், நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளன. திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.
அதிமுக, நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையினையும் வெளியிட்டு தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறது. திமுக இன்று தேர்தல் அறிக்கையினை வெளியிடும் நிலையில் வரும் 31 ஆம் தேதி முதல் பிரசாரத்தை தீவிரப்படுத்துகிறது. இந்த நிலையில் தான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறது. தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.
வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், தவெக இன்று தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் தவெக இன்று ஒரே நாளில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் வேட்பாளர்கள் இன்று அறிமுக கூட்டம் தொடங்கியது.
அப்போது தமிழகத்தில் அறிவிக்கப்படும் 234 வேட்பாளர்கள் மற்றும் புதுவையில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். இதில் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தி நகர் தொகுதியில் புஸ்சி ஆனந்தும், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவும், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனும் போட்டியிடுவதாக விஜய் அறிவித்தார்.
அறிமுகம் செய்யப்பட்டுள்ள வேட்பாள்ர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். தவெக தலைவர் விஜய்யும் நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் நிர்வாகி விஎஸ் பாபு, கு.ப கிருஷ்னண் ஆகியோருக்கும் சீட் வழங்கப்பட்டு உள்ளது.






