நாளை ரம்ஜான் பண்டிகை

மிழகத்தில் புனித ரமலான் மாதத்தின் 30 நாட்கள் நோன்பு இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, நாளை (மார்ச் 21, சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை ஈகைத் திருநாளாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி ரமலான் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 19 முதல் இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பைத் தொடங்கினர். கடந்த ஒரு மாத காலமாக அதிகாலை முதல் மாலை வரை உணவின்றி நோன்பிருந்து, பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் மற்றும் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நோன்புக் கஞ்சி எனத் தமிழகம் முழுவதும் ஆன்மீக மணம் கமழ்ந்து வந்தது.பண்டிகைக்கான பிறை குறித்துத் தமிழ்நாடு அரசுத் தலைமை காஜி முப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்படவில்லை. எனவே, ரமலான் மாதம் 30 நாட்களாகப் பூர்த்தியடைகிறது. இதன் அடிப்படையில், மார்ச் 21-ஆம் தேதி சனிக்கிழமை தமிழகம் முழுவதும் ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) கொண்டாடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை காஜி தாவூத் கைஸர் அவர்களும் சனிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படுவதை உறுதி செய்துள்ளார். ரம்ஜான் பண்டிகையையொட்டித் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் சிறப்புத் தொழுகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புத்தாடை அணிந்து, ஏழை எளியவர்களுக்கு ஜகாத் எனப்படும் தர்மங்களை வழங்கி, சகோதரத்துவத்தைப் பறைசாற்றும் வகையில் இந்தப் பண்டிகை அமையவுள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இஸ்லாமியப் பெருமக்களுக்குத் தங்களது ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.