ஆர்.எஸ்.புரம் வங்கிக் கிளையிலிருந்து வந்த மிரட்டல்; மேட்டுப்பாளையம் தொழிலதிபர் வீட்டிற்குச் சென்று அநாகரிகமாகப் பேசிய ‘ரவுடி’ கும்பல் – பொதுமக்கள் பீதி
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப் போற்றப்படும் கோவையில், வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் வசூல் வேட்டை மீண்டும் ‘ரவுடியிசம்’ பாதையில் திரும்பி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில் நிமித்தமாகவும், குடும்பத் தேவைகளுக்காகவும் வங்கிகளில் கடன் வாங்கும் அப்பாவி வாடிக்கையாளர்களை, ‘ரிக்கவரி ஏஜென்ட்’ என்ற பெயரில் வலம் வரும் ரவுடி கும்பல்கள் அதிகாலை முதல் நள்ளிரவு வரை வீடு புகுந்து மிரட்டுவது வாடிக்கையாகி விட்டது. கடன் கொடுக்கும் போது ‘நைசாக’ப் பேசி வலைவிரிக்கும் வங்கி ஊழியர்கள், வசூலின் போது மட்டும் அநாகரிகமான வார்த்தைகளை அள்ளி வீசும் கும்பலை ‘அவுட்சோர்சிங்’ முறையில் களமிறக்கி விடுவதாகப் புகார்கள் எழுந்து உள்ளன. தேர்தல் நெருங்கும் வேளையில், அரசின் கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்கவிட்டு இந்த ‘வசூல் வேட்டை’ மீண்டும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற வாடிக்கையாளர், ஆர்.எஸ்.புரம் பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிளையின் ஊழியர் எனத் தன்னைக் கூறிக் கொண்ட ஒரு வசூல் ஏஜென்ட்டினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளார்.
விஜயகுமாரின் வீட்டிற்கே நேரடியாகச் சென்ற அந்த நபர், பொது இடமென்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்து, தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளார்.
இது குறித்து விஜயகுமாரின் நண்பர்கள் அந்த ஏஜென்ட்டைத் தொலைபேசியில் அழைத்து விளக்கம் கேட்டபோது, அவர்களையும் ‘பார்த்துவிடுவேன்’ எனத் துணிச்சலாக மிரட்டல் விடுத்து உள்ளார்.
இந்த மிரட்டல் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் ‘வைரல்’ ஆகி வருவதோடு, வங்கி நிர்வாகத்தின் ‘சைலண்ட்’ ஆதரவு இவர்களுக்கு இருக்கிறதா ? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.
முன்னதாக, கடன் வசூல் என்ற பெயரில் நடத்தப்பட்ட அராஜகங்களால் தற்கொலைகள் அதிகரித்து வந்த நிலையில், ரிசர்வ் வங்கி மற்றும் அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தன. ஆனால், தற்போது அந்த விதிகள் அனைத்தும் ‘டம்மி’ ஆக்கப்பட்டு, மீண்டும் ஏஜென்ட்கள் மூலம் ரவுடியிசம் அரங்கேறி வருகிறது. கடன் வாங்கியவர்கள் தவணை செலுத்தத் தவறினால் சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதை விடுத்து, அநாகரிகமான முறையில் மிரட்டுவது மனித உரிமை மீறல் எனச் சமூக ஆர்வலர்கள் கொதிக்கின்றனர். மீண்டும் ஒரு தற்கொலைச் சம்பவம் அரங்கேறும் முன், மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த ‘வசூல் மாஃபியா’க்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோவை மக்களின் கோரிக்கையாக உள்ளது.







