ஸ்ரீநகர்: கடவுளின் கருணையால் உயிர் தப்பினேன் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் ஃபரூக் அப்துல்லா கூறியதாவது: கடவுளின் கருணையால் நான் உயிர் தப்பினேன். திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுடப்பட்ட விவரம் கூட எனக்குத் தெரியாது. அந்தத் தாக்குதலில் இருந்து கடவுள்தான் என்னைக் காப்பாற்றியுள்ளார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் வீட்டுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எனது பின்பக்கமிருந்து ஒரு பெரிய சத்தம் கேட்டது. திருமண விழா என்பதால் பட்டாசு வெடிக்கிறார்கள் என்று நினைத்தேன். அப்போது ஒருவர் என் அருகே தடுமாறி விழுந்தார். அப்போது கூட எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அதன் பின்னர்தான் துப்பாக்கியால் அந்த நபர் சுட முயன்ற விஷயம் தெரியவந்தது. அவர் யார் என்பது தெரியவில்லை. ஜம்மு-காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடந்து வரும் நிலையிலும், மாநில அந்தஸ்தை மத்திய அரசு இதுவரை திருப்பித்தரவில்லை. எனவே, மாநில அந்தஸ்தை திருப்பியளிப்பதோடு, மாநிலத்துக்கான அதிகாரங்களையும் திரும்ப வழங்க வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் தேர்தலுக்குப் பின்னர் மாநில அந்தஸ்து திருப்பி அளிக்கப்படும் என்ற உறுதியை மத்திய அரசு அளித்தது. ஆனால் அரசு தேர்வு செய்யப்பட்டு சில ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் மத்திய அரசு தனது வாக்குறுதியைக் காப்பற்றவில்லை. இது சரியல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார். துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் கைதானவர் ஜம்முவைச் சேர்ந்த 63 வயதான கமால் சிங் ஜம்வால் என்றும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிக்கு உரிமம் இருப்பதாகவும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர். இதில் தீவிரவாத அமைப்புக்கு சம்பந்தம் இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.







