தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அதன்படி அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியின் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன..
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் கடந்த மாதம் 23-ம் தேதி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.. இதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் 2-வது பொதுக்கூட்டம் கடந்த 1-ம் தேதி மதுரையில் நடைபெற்றது.. இந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார்..
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 3-வது பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற உள்ளது.. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.. திருச்சியை அடுத்த பஞ்சப்பூர் பகுதியில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.. பொதுமக்கள் அமருவதற்காக சுமார் 70,000 நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் சுமார் 5 லட்சம் பேர் வரை திரளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். அவருடன் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஜி.கே வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வர உள்ளார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் அவர் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஒரே மேடையில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.
பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் பல நாட்களாக நடைபெற்று வருகின்றன. கூட்டத்தில் பங்கேற்க வரும் வாகனங்களுக்கு தனி நிறுத்துமிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கூட்டம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய பாதுகாப்பு குழுவினர் திருச்சியில் முகாமிட்டு பணிகளை கவனித்து வருகின்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மண்டலத்தைச் சேர்ந்த பல மாவட்டங்களில் இருந்து கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் தங்களது வலிமையை காட்டும் வகையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன. நேற்று முன் தினம் திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக இருக்கும் பாஜகவால் தமிழ்நாட்டை ஆள முடியாது, தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான் என்று கடுமையாக சாடியிருந்தார்.. முதல்வர் இந்த விமர்சனத்திற்கு இன்றைய திருச்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..பிரதமர் மோடி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.. அவரின் பதிவில் ” நாளை மாலை 6:30 மணியளவில், மார்ச் 11 ஆம் தேதி, திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பேரணியில் தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் நானும் இணைவேன். மாநிலம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரபலமடைந்து வருவதால் திமுக அதிர்ச்சியடைந்துள்ளது என்பது தெளிவாகிறது.. திமுகவின் தவறான நிர்வாகத்தையும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் தமிழக மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அதனால்தான், அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நம்பிக்கை மற்றும் முன்னேற்ற நிகழ்ச்சி நிரலுடன் இணைகிறார்கள்.” என்று பதிவிட்டிருந்தார்.







