தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 11) தொடங்கி ஏப்.6 வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடத் தேர்வுகள் நடைபெறுகின்றன.
மாநிலம் முழுவதும் உள்ள 4,219 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 12,467 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 82,806 மாணவர்கள், 26,196 தனித்தேர்வர்கள், 395 சிறைக் கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 9,397 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாற்றுத் திறனாளிகள், சிந்தனைத் திறன் குறைபாடு உடையவர்கள் என 12,292 மாணவர்கள் ‘ஸ்கிரைப்’ உதவியுடன் பங்கேற்கின்றனர். அறை கண்காணிப்பு பணியில் 49,542 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். முறைகேடுகளை தடுக்க 4,954 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 300 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும். விடைத்தாளில் நீலம், கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். கலர் பென்சில், பேனா பயன்படுத்தக் கூடாது. பெயர், தேர்வு எண், சிறப்பு குறியீடு ஆகியவற்றை குறிப்பிடக் கூடாது. மாணவரின் புகைப்படம், பதிவு எண், பாடம் போன்ற விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட வேண்டும். தேர்வு அறைக்குள் மாணவர்கள், அறை கண்காணிப்பாளர்கள் செல்போன் போன்ற மின்சாதனங்களைக் கொண்டுவரக் கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆள்மாறாட்டம் செய்வது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடப்பது, விடைத்தாளைமாற்றுவது, காப்பி அடிப்பது போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். இதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.









